பக்கம் எண் :

142மலரும் உள்ளம்

வெண்ணெய் திருடிய கண்ணன்

கண்ணன் வெண்ணெய் திருடித் தின்ன
    எண்ணங் கொண்டனன்.
கள்ளத் தனமாய் ஒருவர் வீட்டின்
    உள்நு ழைந்தனன்.
வெண்ணெய் முழுதும் தின்று, தின்று
    தீர்த்துக் கட்டினன்.
வீட்டுக் காரி வந்து விட்டாள்.
    மாட்டிக் கொண்டனன்!

“வெண்ணெய் திருடித் தின்னு கின்ற
    திருட்டுக் கண்ணனே,
வெளியில் போன சமயம் பார்த்துத்
    திருட வந்ததேன்?
உன்னை உனது தாயி டத்தில்
    இழுத்துச் சென்றுநான்
உரலில் கட்டி வைக்கச் சொல்வேன்”
    என்று கூறினள்.

159

“வெள்ளைக் கன்றைத் தேடிக் கொண்டே
    உள்ளே வந்திட்டேன்.
வெள்ளை யாக உறியில் ஏதோ
    இருக்கக் கண்டிட்டேன்.
உள்ளே கையை விட்ட பிறகே
    வெண்ணெய் என்று நான்
உணர்ந்தேன்” என்று கூறிக் கண்ணன்
    ஓடிப் போய்விட்டான்!