பக்கம் எண் :

மலரும் உள்ளம்179

ஒன்று மட்டும் சோம்பலாய்
    ஒடுக்கிக் கொண்டு உடலையே,
அன்று கூட்டில் இருந்தது.
    ஆபத் தொன்று வந்தது!

எங்கி ருந்தோ வந்தனன்,
    ஏறி ஒருவன் மரத்திலே.
அங்கி ருந்த கூட்டினை 
    அருகில் நெருங்கிச் சென்றனன்.

சிறகு இருந்தும் பறக்கவே
    தெரிந்தி டாமல் விழித்திடும்
குருவிக் குஞ்சைப் பிடித்தனன்; 
    கொண்டு வீடு சென்றனன்.

குருவிக் குஞ்சு அவனது
    கூட்டில் வாட லானது.
அருமை அன்னை உரைத்தது
    அதனின் காதில் ஒலித்தது.