நன்கு காலும் ஒடிந்ததால்
நடக்க முடிய வில்லையே
என்றன் குடிசை தன்னிலே
இப்போ துள்ள” தென்றனன்.
உடனே, அந்தச் சிறுமியும்
உள்ளம் நொந்து அவனுடன்
குடிசை தன்னை நோக்கியே
"குடுகு" டென்று ஓடினள்.
தரையில் படுத்து வலியினைத்
தாங்கொ ணாது புரண்டிடும்
அருமை நாயைக் கண்டனள்;
அருகில் நெருங்கிச் சென்றனள்.
“ஐயோ, பாவம்!” என்றனள்;
அதனின் காலை நோக்கினள்;
"செய்வ தென்ன?" என்பதைச்
சிந்தித் துடனே எழுந்தனள்.
அந்தச் சிறுவன் உதவியால்
அடுப்பை மூட்டி, அதனிலே
வெந்நீர் போட லாயினள்;
விரைந்து வேலை பார்த்தனள்.
|