பக்கம் எண் :

212மலரும் உள்ளம்

மூட்டைப்பூச்சி

படுத்து உறங்கும் போதிலே
    பயமில் லாமல் என்னையே
கடித்து எழுப்பும் மூட்டையே,
    காலம் கிட்டி விட்டதோ?

இரத்தம் உடலில் ஊறவே,
    ஏது, ஏதோ மருந்துகள்
சிரத்தை யோடு தின்பதும்
    தினமும் உன்னை வளர்க்கவோ?

இரவில் விழிக்கச் செய்கிறாய்.
    இரத்த மெல்லாம் குடிக்கிறாய்.
பரவும் உன்றன் வம்சமே
    படுத்தும் பாடு கொஞ்சமோ?

இருக்கும் இடத்தைத் தேடியே
    இச்சை யோடு வருகிறாய்.
"நறுக்கு, நறுக்கு" என்றுநீ
    நன்கு கடித்து விடுகிறாய்.