பக்கம் எண் :

மலரும் உள்ளம்33

என் தெய்வம்

அம்மா, அம்மா, வருவாயே,
       அன்பாய் முத்தம் தருவாயே.
அம்மா உன்னைக் காண்டாலே,
       அழுகை ஓடிப் போய்விடுமே.

பத்து மாதம் சுமந்தாயே
       பாரில் என்னைப் பெற்றாயே.
பத்தி யங்கள் காத்தாயே.
       பாடு பட்டு வளர்த்தாயே.

அழகு மிக்க சந்திரனை
       ஆகா யத்தில் காண்பித்தே
பழமும், பாலும் ஊட்டிடுவாய்;
       பாட்டும், கதையும் சொல்லிடுவாய்.

தமிழைக் கற்றுத் தந்திடுவாய்.
       "தத்துப் பித்"தெனப் பேசிடினும்
"அமுதம், அமுதம்" என்றிடுவாய்.
       அணைத்து முத்தம் தந்திடுவாய்.