பக்கம் எண் :

94மலரும் உள்ளம்

விடுதலை

கட்டை அவிழ்த்து விட்டிடின்,
       களித்துக் கன்று துள்ளிடும்.
வெட்ட வெளியில் சுற்றிடும்
       மிகவும் மகிழ்ச்சி கொண்டிடும்.

கூட்டைத் திறந்து விட்டிடின்,
       குதித்துக் கிளியும் பறந்திடும்.
வாட்டம் நீங்கி வானிலே,
       வட்ட மிட்டுத் திரிந்திடும்.

மடையைத் திறந்து விட்டிடின்
       மகிழ்ந்து நீரும் பாய்ந்திடும்.
தடையில் லாது வேகமாய்,
       "தடத" டென்று ஓடிடும்.

புனித மான விடுதலை
       பெறவே அவைகள் துடிக்கையில்,
மனிதன் மட்டும் அடிமையாய்
       மண்ணில் வாழ நினைப்பதோ?