பக்கம் எண் :

96மலரும் உள்ளம்

விளங்கவைப்போமே

ஒன்று கூடி நாட்டுக் காகத்
       தொண்டு செய்வோமே - நாமும்
       தொண்டு செய்வோமே.
அன்றே நமது நாட்டின் பெருமை
       அதிக மாகுமே - இன்னும்
       அதிக மாகுமே.

சாதி மத பேத மின்றித்
       தழைத்து வாழ்வோமே - நன்கு
       தழைத்து வாழ்வோமே.
நீதி யார்க்கும் ஒன்று என்றே
       நினைத்து வாழ்வோமே - என்றும்
       நினைத்து வாழ்வோமே.

நாளை வாழ்வு தன்னில் நாமே
       நாட்டை ஆள்பவர் - நமது
       நாட்டை ஆள்பவர்.
கோழை எண்ணம் விட்ட வாழ்வு
       கொண்டு நிற்போமே - வாழ்வு
       கொண்டு நிற்போமே.