பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதத்தின் முதற் பாகத்திலுள்ள
சமர்ப்பணமும் முகவுரையும் வருமாறு:
சமர்ப்பணம்
தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும்
இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத்
தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்குமா இந் நூலைப் பாதகாணிக்கையாகச்
செலுத்துகிறேன்.
ஆசிரியன்
முகவுரை
எளிய பதங்கள், எளிய நடை, எளிதில்
அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவிய
மொன்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.
ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி
எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல்வேண்டும்.
காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ‘ஆசையால்’ இதனை எழுதி வெளியிடுகின்றேன்,
பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழி காட்டியாக.
இந் நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும், சூதில் விருப்பமில்லாத
வனாகவும், துரியோதனனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கின்றேன். அவனும் மகனைப்
போலவே துர்க்குணங்களுடையவன் என்று கருதுவோரு முளர். எனது சித்திரம் வியாசர் பாரதக்
கருத்தைவ தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாசபாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே
கருதிவிடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந் தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’
அதிகமில்லை; தமிழ்நடைக்குமாத்திரமே நான் பொறுப்பாளி. தமிழ்ஜாதிக்குப் புதிய
வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங் கட்டிநிற்கும் பராசக்தியே என்னை இத் தொழிலிலே
தூண்டினாளாதலின், இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன்.
ஓம் வந்தே மாதரம்.
-- சுப்பிரமணிய பாரதி