காலனுக்கு உரைத்தல்
[1919-ம்
வருஷம் டிசம்பர் மாதம் “சுதேசமித்திரன்” இதழில் வெளியிடப்பட்டிருந்த
ராக, தாள, ஸ்வர வரிசைகளுடன் இப்பாடல் தரப்படுகின்றது. இந்
நூலில் கடைசிப் பாடலில் ஒரு வரி இல்லாத குறையை நிறைவு செய்யவும்
அப்பாடலைத் திரும்பவும் பதிப்பித்துள்ளோம்.]
15.
ஆதாரம்: பாரதி புதையல் 1 -- பக்கம் 24 |
[ராகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி]
பல்லவி
காலா, உனை நான் சிறு புல்லென
மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்! |
சரணங்கள்
வேலாயுத விருதினை
மனதிற் பதிக்கிறேன் நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே-அட |
(காலா
உனை) |
1 |
ஆலால முண்டவ னடி சரணென்ற மார்க்கண்டன் தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன் இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனை விதிக்கிறேன்!-ஹரி
நாராயணனாக நின்முன்னே உதிக்கிறேன்!-அட |
(காலா
உனை) |
2 |
[பல்லவிக்கு ஸ்வர மாதிரி: சரிகாரிச சாசச நீநிநி கமப மகாரீசா-பப
சாநித
பாபா-மாகா காமப-கமபம கா-ரீசா சரணங்களுக்கும் ஏறக்குறைய இதே மாதிரிதான்.]