பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்


பாரதியார் திருப்புகழும் தேவாரமும்

[பாரதியார் எழுதிய கீழ்க்கண்ட நான்கு பாடல்களை அம்பாசமுத்திரம் திரு.
அ. ரா. கிருஷ்ணன் என்பார் திரு. ரா.அ. பத்மநாபன் அவர்களிடம் மனமுவந்து அளிக்க,
அவற்றை அவர் தமது “பாரதி புதையல் 2” நூலில் வெளியிட்டார். இந்நாள்வரை வெளிவந்த “பாரதியார் கவிதைகள்” நூலில் இப் பாடல்கள் இடம்பெறவில்லை.
இப் பாடல்களுக்குத் தலைப்புகள் கிடைக்கப் பெறாத காரணத்தால், முதல் மூன்று
பாடல்கள் திருப்புகழ் நடையிலும், நான்காம் பாடல் தேவாரநடையிலும் இருப்பதை
யொட்டி, “பாரதி திருப்புகழ்” என்றும், “பாரதி தேவாரம்” என்றும் திரு. கிருஷ்ணன்
சூட்டியுள்ள தலைப்புகளே இங்கும் உபயோகிக்கப்பட்டுள்ளன என்று
திரு. ரா.அ. பத்மநாபன் ஒரு சிறு விளக்குக் குறிப்பும் தந்துள்ளமை
கவனிக்கத்தக்கது.-பதிப்பாசிரியர்கள்.]


பாரதி திருப்புகழ்

[ 1 ]


தோதக மெத்தெனை யத்தனை கற்றவர்
சூதர மொத்தவர் கொக்கு நிகர்ப்பவர்
சூதுபெருத்தவர் உக்ர மனத்தவர் -- சதியோடே
1


பாதக நித்தமு மெத்த விழைப்பவர்
பாரக முற்றவு நத்து சினத்தவர்
பாவமி யற்றிடு மத்துறை மிக்கவர் -- விரகாலே
2

26. ஆதாரம்: பாரதி புதையல் 2 -- பக்கம் 127-130


வேதனை பற்பல உற்றன நற்றிறல்
வீரம ழித்துஅதி துக்கமி குத்தி
மேதகு நற்கலை முற்ற ஒழித்தனம் -- இனியேனும்
3

ஆதர முற்றொரு பக்க நிலைத்தவர்
ஆணவ முற்றவரீற்றுமரித்திடர்
யாவரு மித்ததி நட்பொடு சட்டென -- வருவீரே.
4


[
2 ]

மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க
வழியே தகர்த்த -- சதியாளர்
மதமேவு மிக்க குடிகேடர் உக்கிர
மனமேவும் அற்பர் -- நசையாலே
அறமே யழிந்து வசையே தழைத்த
அதிநீசர் மிக்க -- அகமேவி
அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி
அதி யாணவத்தர் -- முறையாலே
விறலே மறுக்க உணவேது மற்று
விதியோ எனக்கை -- தலைமோதி
விழிநீர் சுரக்க வெகு வாதை யுற்று
மெலிவாகி நிற்றல் -- அழகாமோ!
புறம்மேவு பக்தர் மனமாசறுத்த
புனிதா குறப்பெண் -- மணவாளா
புகலேது மற்ற தமியேமை ரட்சி
பொருவேல் பிடித்த-பெருமாளே.

கண்ணன்மீது திருப்புகழ்

[ 3 ]


செயிர்த்த சிந்தையர் பணநசை மிகமிக
வருத்த வந்தவல் வினைபுரி முகடிகள்
சிறக்கு மன்பதை யுயிர்கவர் எமபடர் -- எனவாகி
1

சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு
நலச்சு தந்திர வழிதெரி கரிசகலு
திருத் தகும் பெரி யவர்களை யகமொடு -- சிறையூடே
2

வயிர்த்த கொள்கையின் வசைசொலி யுணவற
வருத்தி வெந்துயர் புரிபவர் சுயநல
மனத்து வன்கணர் அறநெறி தவறிய -- சதியாளர்
3

மதர்த்தெ ழுந்தைன் புளகித இளமுலை
மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில்
வசப்ப டும்படி சிலர்களை மயல்புரி -- அதிநீசர்
4

மயிர்த் தலந்தொறும் வினைகிளர் மறமொடு
மறப்ப ரும்பல கொலைபுரி கொடியவல்
வனக்கு றும்பர் வெவ் விடநிகர் தகவினர் -- முறையாலே
5

வருத்த ரும்பல பவிஷுகள் ஒழிதா
வகைப்பெரு ங்கலை நெறியறம் அழிபடா
மனத்து விஞ்சிய தளர்வொடு மனுதினம் -- உழல்வோமே.

6

அயிர்த்த வஞ்சக அரவுயர் கொடியவன்
அமர்க்க ளந்தனில் இனமுடன் மடிதர
அமர்த்த வெம்பரி யணிரத மதைவிடும் -- மறைநாதா
7

அளப்ப ருங்குண நலமிக நினைபவர்
அகத்தெ ழும்படர் அலரிமுன் பனியென
அகற்று செந்திரு மடமயில் தழுவிய -- பெருமாளே!
8


பாரதி தேவாரம்

[ 4 ]அதியாசை விஞ்சி நெறியேது மின்றி
அவமான வஞ்ச மிகவே
துதிமேவு மெங்கள் பழநாடு கொண்டு
தொலையாத வண்மை யறநீளும்
சதியேபுரிந்த படுநீசர் நைந்து
தனியோட நன்கு வருவாய்
நதியேறு கொன்றை முடிமீதி லிந்
நகையாடும் செம்பொன் மணியே!