பக்கம் எண் :

தமிழச்சியின் கத்தி


தேசிங்குக்குச் சேதி எட்டிற்று
தென்பாங்கு -- கண்ணிகள்

நெஞ்சிப் பெருங் கோயில் -- தன்னிலே
தேசிங்கு வீற் றிருந்தான்
அஞ்சி அருகினிலே -- இருந்தார்
அமைச்சர், மற் றவர்கள்
பஞ்சு பெருந் தீயைப் பொசுக்கப்
பார்த்தும் இருப்பீரோ ?
செஞ்சிப் படி மிதித்தார் -- இங்குள்ள
சிப்பாய் தனை மடித்தார்

சென்று பிடித் தாரோ -- அல்லது
செத்து மடிந் தாரோ ?
ஒன்றும் தெரிய வில்லை
என்று துடி துடித்தான் -- தேசிங்கன்!
இருவர் சிப் பாய்கள்,
நின்று தலை வணங்கி -- அவ்விடம்
நிகழ்ந்தவை உரைப்பார்;

திம்மனும் சுப்பம்மா -- எனுமோர்
சேயிழையும் எதிர்த் தார்
நம்மவர் சிற்சில பேர் -- இறந்தார்
நம்அதி காரியின் மேல்
திம்மன் அவன் பாய்ந்தான் -- ஒரு சொல்
செப்பினன் அப்போது
'செம்மையில் என்னிடமே -- சிக்கினாய்
தேசிங்கு மாய்க' என்றான்

என்றுசிப் பாய் உரைத்தான் -- தேசிங்கன்
'என்னை மடிப்பது தான்
அன்னவனின் நினைப்போ -- சரிதான்
அப்படியா அடடே
இன்று பிழைத்தேன் நான் -- அடடே
என்றுபு கன்றவனாய்ப்;
'பின்னும் நடந்தனென்ன? --இதனைப்
பேசுக' என்று ரைத்தான்.
திம்மன் மடிந்து விட்டான் -- மனைவி
சேயிழை சிக்கி விட்டாள்
செம்மையில் அன்னவளின் -- இரண்டு
செங்கையைப் பின் இறுக்கி
நம்மவர் இவ்விடத்தை -- நோக்கியே
நடத்தி வருகின்றார்
திம்மன் மனைவியைப்போல் -- கண்டிலோம்
திறத்தில் என்று ரைத்தார்.





(5)





(10)




(15)





(20)





(25)




(30)





(35)



சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள்

தென்பாங்கு -- கண்ணிகள்

கோட்டை நெடும் வாயிலினைக் குறுகிவிட்டார் -- அந்தக்
கோதையை நடத்திவரும் கூட்ட மக்களும்!
போட்டிறுக்கிப் பின்புறத்தில் கட்டிய கையும் -- முகில்
போற்பரவி மேற்புரளும் நீண்ட குழலும்
தீட்டி வைத்த வேலின்முனை போன்றவிழியும் -- வந்து
சீறுகின்ற பாம்பையொத்த உள்ளமும் கொண்டாள்
"கோட்டையினில் யாரிடத்தில் கொண்டுசெல் கின்றீர்
        -- என்னைக்

கூறிடுவீர என்றவுடன் கூறுகின்றனர்:

"ஆளுபவர் தேசிங் கெனக் கேட்ட தில்லையோ? -- அவர்
அவ்விடத்தில் வீற்றிருத்தல் கண்டதில்லையோ?
தோளுரத்தை இவ்வுலகம் சொன்ன தில்லையோ? -- என்று
சொன்னமொழி கேட்டனள் வியப்படைந்தனள்
ஆளுகின்ற தேசிங்கென நாங்கள் நினைத்தோம் -- அவன்
அங்கு வந்த பேர்வழியை ஒத்தி திருந்ததால்!
வாளுக்கிரை ஆனவனை நாங்கள் அறியோம் -- அந்த
மன்னன் நினைவாய் அவனை வெட்டி மடித்தோம்.

செஞ்சியினி லேஇருக்கும் செந்தமிழர்கள் பெற்ற
தீமையின்னும் தீரவில்லை என்கணவரோ
செஞ்சிமன்னன் தீர்ந்தனன் இனித்த மிழர்க்கே -- ஒரு
தீங்குமில்லை என்னும்உளப் பாங்கொடு சென்றார்
செஞ்சியிலே ஆளுகின்ற அவ் வடக்கரை -- என்
செவ்விழிகள் காணும்; என்கை காணவசமோ?
மிஞ்சும் என்றன் ஆவல்நிறை வேறுவ துண்டோ -- என
மெல்லி அவள் நெஞ்சில் வெறி கொண்டு நடந்தாள்.

( 40 )




( 45 )







( 50 )




( 55 )





( 60 )


தேசிங்கு முன் வந்தாள்

எண்சீர்விருத்தம்
  

புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த
         விடுமூச்சுப் புகைசிந்தக் குறித்துப் பார்த்த
எதிர்ப்பான பார்வையினாள்! அலையுங் கூந்தல்
        இருட்காட்டில் நிலவுமுகம் மறைந்து தோன்றக்
கொதித்கின்ற நெஞ்சத்தால் கொல்லு வாள்போல்
        கொலுமுன்னே வந்துநின்றாள். அவ்வ டக்கன்
உதிர்க்கின்ற கனல்விழியால் அவளைப் பார்த்தான்
        அப்பார்வை அற்றொழிய உறுத்திப் பார்த்தாள்!


( 65 )




( 70 )

முற்றிய பேச்சு

தென்பாங்கு -- கண்ணிக
ள்

உண்மையைச் சொல்லிவிடுவாய்! -- எவன்தான்
உன்னை அனுப்பி வைத்தான்?
மண்ணிடை மாண்டானே -- தெரியா
மனிதன் உன்உறவா?
எண்ணும் என் ஆட்சியிலே செய்ததேன்
இந்தக் கலக மடீ?
திண்மை உனக் குளதோ -- என்றந்தத்
தேசிங்கு சொன்னவுடன்,

"பொய்யினைச் சொல்வ தில்லை -- தமிழர்
பொய்த்தொழில் செய்வதில்லை
மெய்யினைப் பேசுதற்கும் -- தமிழர்
மெய்பதைத் திட்ட தில்லை
கையினில் வாளாலே -- உனது
காவல் தலைவன்தலை
கொய்தவர் யார் எனிலே -- எனையே
கொண்டவர் என்றறிவாய்!

யாரும் அனுப்பவில்லை -- எமையே
இட்டுவந் தான் ஒருவர்
சேரியில் ஓர்குடிசை -- தந்துமே
தீய இரு மாதர்
கோரிய வேலை செய்வார் -- எனவே
கூட இருக்க விட்டான்
சீரிய என் துணைக்கே -- அவன் ஓர்
சிப்பாய் உடை கொடுத்தான்.

கோட்டைக் கழைத் தேகித் -- திரும்பக்
கூட்டிவ ராதிருந் தான்
வீட்டில்என் சோற்றி னிலே -- மயக்கம்
மிஞ்சும் மருந்தை யிட்டான்
ஆட்டம் கொடுத்த துடல் -- உணர்வும்
அற்ற நிலையினிலே
காட்டு மனிதன் அவன் -- எனது
கற்பை அழித்தானே!

கற்பை அழித் தானே -- தன்னைத்தானே
காத்துக் கொள்ளும் திறமை
அற்பனுக் கில்லை அன்றோ! -- திறமை
ஆருக்கி ருக்க வில்லை!
வெற்பை இடித்து விடும் -- உனது
வீரத்தையும் காணும்
நிற்க மனமிருந்தால் -- நின்றுபார்
நெஞ்சைப் பிளக்கும் என்கை!

குற்றம் புரிந்தவர் யார்? -- உனது
கோலை இகழ்ந்தவர் யார்?
கற்பை இகழ்ந்தவர் யார்? -- உனது
கருத்தை மேற்கொண்டவன்!
சொற்கள் பிழை புரிந்தாய் -- "அடியே"
என்றெனைக் சொல்லுகின்றாய்
நற்றமிழ் நாட்டவரே -- இகழ்தல்
நாவுக்குத் தீமை என்றாள்.

சென்ற உன் கற்பினுக்கே -- எத்தனை
சிப்பாய் களை மடித்தாய்?
என்று வினவலுற்றான் -- அதற்கே
ஏந்திழை கூறு கின்றான்;
"என்னருங் கற்பினுக்கே -- உன்னரும்
இன்னலின் ஆட்சியையும்
உன்னரும் ஆவியையும் -- தரினும்
ஒப்பில்லை" என்றுரைத்தாள்.

'இந்த வடக்கத்தியான் -- செஞ்சியினை
ஆள்வதை ஏனிகழ்ந்தாய்?
இந்து மதத்தவன் நான் -- மதத்தின்
எதிரி நானல்லவே
சொந்த அறிவிழந்தாய் -- பிறரின்
சூதையும் நீ அறியாய்
இந்தத் தமிழ் நாட்டில் -- பிறரின்
இன்னல் தவிர்ப்பவன் நான்."

சொல்லினன் இம்மொழிகள் -- சுப்பம்மா
சொல்லுகின்றாள் சிரித்தே;
தில்லித் துருக்கரையும் -- மற்றுமொரு
திப்புவின் பேரினையும்
சொல்லி இத்தென்னாட்டைப் -- பலபல
தொல்லையில் மாட்டி விட்டார்;
மெல்ல நுழைந்து விட்டார்; -- தமிழரின்
மேன்மைதனை அழித்தார்.

அன்னவர் கூட்டத்திலே -- உனைப்போல்
ஆரும் தமிழ் நாட்டில்
இன்றும் இருக்கவில்லை -- பிறகும்
இருக்கப் போவதில்லை
அன்று தொடங்கி இந்தத் -- தமிழர்
அன்புறு நாடுபெற்ற
இன்னலெல்லாம் வடக்கர் -- இழைத்த
இன்னல்கள் என்று ரைத்தாள்.

ஆளும் நவாபினையோ -- தமிழர்
ஆரும் புகழுகின்றார் --
தேளேன அஞ்சுகின்றார் -- செஞ்சியின்
தேசிங்கின் பேருரைத்தால்?
'நாளும் வரும்; வடக்கர் -- தொலையும்
நாளும் வரும்; அதை எம்
கேளும் கிளைஞர்களும் -- விரைவில்
கிட்டிட வேண்டும் என்றாள்.




( 75)





( 80)




( 85)





( 90)




(100)





(105)





(110)




(115)





(120)





(125)




(130)





(135)




(140)





(145)





(150)



(155)





(155)

தேசிங்கு சினம்

எண்சீர் விருத்தம்


     

நாள்வரட்டும்; போகட்டும்; ஆனால் இந்த
          நலமற்ற தமிழர்மட்டும் வாழமாட்டார்;
தோளுரமும் மறத்தனமும் அவர்கட் கில்லை;
          சொல்லேடி தமிழச்சி! இருந்தால் சொல்லு!
"நாள்வரட்டும எந்தநாள்! தமிழர் வெல்லும்
          நாள்தானோ! அந்தநாள் வருவ தற்குள்
வாள்வீரர் வடநாட்டார் வளர்ச்சி யின்றி
          மலைக்குலையில் தூங்குவரோ ஏண்டி?" என்றான்.

தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்;
          தமிழர்க்கு மறமில்லை நன்று சொன்னாய்
இமயமலைக் கல்கமந்த வடநாட் டான்பால்
          சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட
உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்
          உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்!
எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்
          எச்சிலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய்.

யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்
          இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்
நீ,மற்றும் உன்நாட்டார், வளர்ச்சி எய்தி
          நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்!
தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள்
          துளிகூட ஒழுக்கமிலாப் பாண்டு மக்கள்!
நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால்
          நடுநிலைமை அறிவீர்கள்! அடங்குவீர்கள்!

வஞ்சகத்தைத் தந்திரத்தை, மேற்கொள் ளாத
          வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார், அந்த
வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட
          வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்;
நெஞ்சத்தால், தமிழ்நாட்டார் வென்றார், அந்த
          நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய்.
கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும்
          கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன்றேகேள்,

ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்!
          அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்:
காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான்
          கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை!
காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்;
          கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி!
தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு
          தூங்கிவிழித்தால் உடையோன் உரிப்பான் தோலை!
'அறம்'எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்
          அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும்
பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட
          பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்!
முறைதெரியா முட்டாளே திருந்தச் சொன்னேன்
          முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே.
சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம்
          செப்படா என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.

கட்டோடு பிடித்திருந்த சிப்பாய் மாரைக்
          கண்ணாலே எச்சரிக்கை செய்து, மன்னன்
'இட்டுவா கொலைஞரைப்போய், இதையும் கேட்பாய்,
          எல்லார்க்கும் எதிரினிலே, பொது நிலத்தில்,
பட்டிஇவ ளைக்கட்டி நிற்கச் செய்து
          பழிகாரி இவளுள்ளம் துடிக்கு மாறு
வெட்டுவிப்பாய், ஒருகையை; மறுநாட் காலை
          வெட்டுவிப்பாய் ஒருமார்பை; மூன்றாநாளில்

முதுகினிலே கழியுங்கள் சதையைப் பின்னர்
          மூக்கறுக்க! காதுபின்பு: ஒருகை பின்பு:
கொதிநீரைத் தெளித்திடுக இடைநே ரத்தில்:
          கொளுத்துங்கள் குதிகாலை! விட்டுவிட்டு
வதைபுரிக; துவக்கிடுக வேலை தன்னை;
          மந்திரியே உன்பொறுப்பு; நிறைவேறச்செய்
இதுஎன்றன் முடிவான தீர்ப்பே' என்றான்
          எதிர் நின்ற தமிழச்சி இயம்பு கின்றாள்;
"மூளுதடா என்நெஞ்சில் தீ!தீ! உன்றன்
          முடிவேக மூளுதடா அக்கொடுந்தீ!
நீளுதடா என்நெஞ்சில் வாள்! வாள்! உன்றன்
          நெடுவாழ்வை வெட்டுதடா அந்தக் கூர்வாள்!
நாளில்எனைப் பிரிக்குதடா சாவு! வந்து
          நடுவிலுனைத் தின்னுமடா அந்தச் சாவே!
ஆளனிடம் பிரித்ததடா என்னை! என்னை!
          அன்புமனை யாள்பிரிவாள் உன்னை! உன்னை"

என்றதிர்ந்தாள் திசையதிர்ந்து போகும் வண்ணம்!
          எல்லாரும் சுப்பம்மா நிலைமை தன்னை
ஒன்றுபடப் பார்த்திருந்தார்! அவளுடம்பில்
          ஒளிகண்டார்; கரும்புருவம் ஏறக் கண்டார்.
குன்றத்தைக் கண்டார்கள் கொலுவின் முன்னே!
          குரல்வளையின் கீழ்நோக்கி மூச்சை ஆழ்த்தி
நின்றிருந்த பெருமாட்டி நிலத்தில் சாய்ந்தாள்;
          நெடுவாழ்வின் பெரும்புகழைச் சாவில் நட்டாள்!
பேச்சில்லை! கேட்கவில்லை எதையும் யாரும்
பெருமன்னன் நடுக்கமுறும் புதுமை கண்டார்!
ஏச்சுக்கள், கொடுஞ்செயல்கள் எனக்கேன் என்றான்.
இரக்கத்தை 'வா' என்றான். அன்பை நோக்கி
ஆச்சியே எனக்கருள்வாய் என்று கேட்டான்
          'அறமேவா' என அழைத்தான்! அங்கே வேறு
பேச்சில்லை கேட்கவில்லை எதையும் யாரும்!
          பிறகென்ன? தேசிங்கு தேசிங்கேதான்.

            முற்றும்


******************************


குறிப்பு


பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்வேறு தான்வேறு
என்றில்லாமல் "நல்லுயிர், உடம்பு, செந்தமிழ்
மூன்றும் நான் நான் நான என்று முழங்கிய தமிழ்
அரிமா. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பாட்டி
லக்கிய வரலாற்றில் அழுத்தமான பதிவுகளை ஏற்
படுத்தித் தனக்குப்பின்னே ஒரு பாட்டுக் குயில்களின்
பட்டாளத்தையே விட்டுச் சென்ற பெருமை அவரின்
       உரிமை.
             
             -- முனைவர் இரா. இளவரசு

( 160 )




( 165 )




( 170 )




( 175 )





( 180 )




( 185 )




( 190 )





( 195 )




( 200 )




( 205 )





( 210 )




( 215 )




( 220 )





( 225 )



( 230 )




( 235 )




( 240 )




( 245 )





( 250 )




( 300 )





( 305 )