பக்கம் எண் :

தமிழியக்கம்

1. நெஞ்சு பதைக்கும் நிலை

கரும்புதந்த தீஞ்சாறே,
கனிதந்த நறுஞ்சுளையே,
கவின்செய் முல்லை

அரும்புதந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
அன்பே, கட்டி

இரும்புதந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலை
ஈட ழித்து

வரும்புதுமை நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்சொல்ல
வாய்ப தைக்கும்.

எடுத்துமகிழ் இளங்குழந்தாய்,
இசைத்துமகிழ் நல்யாழே,
இங்குள் ளோர்வாய்

மடுத்துமகிழ் நறுந்தேனே,
வரைந்துமகிழ் ஓவியமே,
அன்பே, வன்பு

தொடுத்துமகிழ் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
தோன்றா வண்ணம்

தடுத்துவரல் நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்சாற்ற
வாய்ப தைக்கும்.

பண்டுவந்த செழும்பொருளே
பார்அடர்ந்த இருட்கடலில்
படிந்த மக்கள்

கண்டுவந்த திருவிளக்கே,
களிப்பருளும் செந்தமிழே,
அன்பே வாழ்வில்

தொண்டுவந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
துளிர்க்கா வண்ணம்

உண்டுவரல் நினைக்கையிலே
உளம்பதைக்கும் சொல்வதெனில்
வாய்பதைக்கும்

உடலியக்கும் நல்லுயிரே,
உயிரியக்கும் நுண்கலையே,
மக்கள் வாழ்வாம்,

கடலியக்கும் சுவைப்பாட்டே
கண்ணான செந்தமிழே,
அன்பே, நாட்டில்

கெடல் இயக்கும் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைக்
கெடுக்கப் பாடு

படல்தன்னை நினைக்கையிலே
நெஞ்சுபதைக்கும் பகர
வாய்பதைக்கும்.

வையத்தின் பழநிலவே
வாழ்வுக்கோர் புத்துணர்வே,
மயிலே, மேலோர்

ஐயத்திற்கு அறிவொளியே;
ஆடல்தரும் செந்தமிழே,
அன்பே, தீமை

செய்யத்தான் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
தீர்க்க எண்ணும்

மெய்யைத்தான் நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்விளக்க
வாய்ப தைக்கும்

( 5 )


( 10 )

( 15 )


( 20 )


( 25 )

( 30 )


( 35 )


( 40 )

( 45 )


( 50 )


( 55 )

( 60 )

2. இருப்பதைவிட இறப்பது நன்று

வாணிகர்க்கும் தமிழென்றால்
வெறுப்புண்டோ? அரசியல்சீர்
வாய்க்கப் பெற்றோர்

ஆணிகர்த்த பேடிகளோ?
அரும்புலவர் ஊமைகளோ?
இல்லறத்தைப்

பேணுமற்ற யாவருமே
உணர்வற்றுப் போனாரோ?
பெருவாழ்வுக்கோர்

ஏணிபெற்றும் ஏறாத
தமிழர் உயிர் வாழ்வதிலும்
இறத்தல் நன்றே.

மிகுகோயில் அறத்தலைவர்,
அறநிலையக் காப்பாளர்,
விழாவெடுப்போர்.

தகுமாறு மணம்புரிவோர்
கல்விதரும் கணக்காயர்
தம்மாணாக்கர்.

நகுமாறு நந்தமிழை
நலிவுசெய்யும் தீயர்களோ?
நல்வாழ்வுக்கோர்

புகும்ஆறு புறக்கணித்தும்
தமிழர் உயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.

மகிழ்ச்சிசெய வருங்கூத்தர்,
மாத்தமிழை மாய்ப்பதுண்டோ?
வாய்ப்பாட்டாளர்,

இகழ்ச்சியுற நடப்பதுண்டோ?
இசைப்பாடல் ஆக்குபவர்
இழிவேன் ஏற்றார்?

நகச்சிலசொற் பொழிவாளர்
நாணற்றுப் போயினரோ?
வாழ்வுக்கான

புகழ்ச்சியினைப் போக்கடித்தும்
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.

கூற்றமென வாழ்வதுவோ
தமிழுக்கே ஏடெழுதும்
கூட்டம்? தீமை

மாற்றவரும் அச்சகத்தார்
வகைமறந்து போனாரோ?
சொல்லாக் கத்தார்

தூற்றுமொழி ஏன் சுமந்தார்?
துண்டறிக்கை யாளருமோ
தீயர்? வாழ்வில்

ஏற்றமுற எண்ணாத
தமிழர்உயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.

நல்லரும் பொருளுடையார்
நந்தமிழ்க்கோ பகையாவார்?
நாட்டில் ஆணை

சொல்லவரும் அரசியலார்
செந்தமிழ்நாடிதுவென்றும்
தெரியார்போலும்!

வல்லவரும் பெரியநிலை
வாய்த்தவரும் என் செய்தார்?
இன்ப வாழ்வின்

என்லையறிந்தும்திருந்தாத்
தமிழருயிர் வாழ்வதினும்
இறத்தல் நன்றே.

( 65 )


( 70 )

( 75 )


( 80 )


( 85 )

( 90 )


( 95 )


( 100 )

( 105 )


( 110 )


( 115 )

( 120 )

3. வரிப்புலியே, தமிழ் காக்க
எழுந்திரு!


ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேறற்ம்!

கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொழிந்த

பண்டை நலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும்நீ
படைப்பாய்! இந்நாள்

தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெழுந்தே!

உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!

அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாமடைந்த

துயரத்தைப் பழிதன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்

செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே.

வாழியநீ! தமிழ்த்தாய்க்கு
வரும்பெருமை உன் பெருமை!
வயிற்றுக்கு ஊற்றக்

கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திருநீ! இளந்தமிழா
குறைதவிர்க்க

ஆழநிகர் படைசேர்ப்பாய்!
பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்குவிப்பாய்!

ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே

உணர்ந்திடுக தமிழ்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!

பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்

கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!

பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,

எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,

புதுநாளை உண்டாக்குத்
தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே

அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்

இதுதான் நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.

( 125 )


( 130 )

( 135 )


( 140 )


( 145 )

( 150 )


( 155 )


( 160 )

( 165 )


( 170 )


( 175 )

( 180 )

4. மங்கையர் முதியோர் எழுக!

ஓருவானில் பன்னிலவாய்
உயர்தமிழ்ப் பெண்களெலாம்
எழுக! உங்கள்

திருவான செந்தமிழின்
சிறுமையினைத் தீர்ப்பதென
எழுக! நீவிர்.

பெருமானம் காப்பதற்கு
வாரீரேல் உங்கள் நுதற்
பிறையே நாணும்!

மருமலர்வாய்த் தாமரையும்
கனியுதடும், நன்னெஞ்சும்
வாட்டம் எய்தும்!

நகர்நோக்கிப் பசுந்தோகை
நாடகத்து மாமயில்கள்
நண்ணியாங்குப்

பகர்கின்ற செந்தமிழின்
பழிநீக்கப் பெண்களெலாம்
பறந்து வாரீர்!

மிகுமானம் காப்பதற்கு
வாரீரேல் வெண்ணிலவு
முகஞ் சுருங்கும்

மகிழ்வான மலர்க்கன்னம்
வாய்மையுளம் வாட்டமுறும்
மலர்க்கண் நாணும்,

தண்டூன்றும் முதியோரே!
தமிழ்த்தொண்டென்றால் இளமை
தனைஎய்தீரோ?

வண்டூன்றும் சிற்றடியால்
மண்டுநறும் பொடிசிதறும்
பொதிகை தன்னில்

பண்டூன்றும் திருவடியால்
பச்சைமயில் போல்வந்து
தமிழர்க்கு ஆவி

கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய்
கொண்டகுறை தவிர்ப்பதற்குக்
குதித்து வாரீர்.

பிரம்புவளை மெய்யுடையீர்
ஆருயிரில் வாரியிட்டுப்
பிசைந்ததான

உரம்பெய்த செந்தமிழுக்
கொன்றிங்கு நேர்ந்ததென
உரைக்கக் கேட்டால்

நரம்பெல்லாம் இரும்பாகி
நனவெல்லாம் உணர்வாகி
நண்ணிடீரோ?

இரங்குநிலை கொண்டதமிழ்
ஏற்றகுறை தவிர்த்திடநீர்
எழுச்சி கொள்வீர்.

அன்னையினை எதிர்த்தார்க்கும்
அவள் மேன்மை மறந்தார்க்கும்
அயர்ந்தவர்க்கும்

மின்னைவிழி உயர்ந்ததுபோல்
மெய்யுயிரைப் பெற்றதுபோல்
தமிழ்ச்சாப்பாடு

தன்னையுணர் விப்பதற்குச்
சாரைச் சிற்றெறும்பென்னத்
தமிழ்நாட்டீரே,

முன்னைவைத்த காலைப்பின்
வையாமே வரிசையுற
முடுகுவீரே!

( 185 )


( 190 )

( 195 )


( 200 )


( 205 )

( 210 )


( 215 )


( 220 )

( 225 )


( 230 )


( 235 )

( 240 )

5. வாணிகர்

வாணிகர், தம் முகவரியை
வரைகின்ற பலகையில், ஆங்
கிலமா வேண்டும்?

'மாணுயர்ந்த செந்தமிழால்
வரைக' என அன்னவர்க்குச்
சொல்லவேண்டும்!

ஆணிவிற்போன் முதலாக
அணிவிற்போன் ஈறாக
அனைவர் போக்கும்

நாணமற்ற தல்லாமல்
நந்தமிழன் நலங்காக்கும்
செய்கையாமோ?

உணவுதரு விடுதிதனைக்
'கிளப்' பெனவேண் டும்போலும்!
உயர்ந்த பட்டுத்

துணிக்கடைக்கு 'சில்குஷாப்'
எனும்பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும்!

மணக்கவரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை?

தணிப்பரிதாம் துன்பமிது!
தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தானில்லை!

''பவன்'' ''மண்டல்'' முதலியன
இனியேனும் தமிழகத்தில்
பயிலா வண்ணம்

அவன்சென்று முழங்கிடுவீர்!
ஆங்கிலச்சொல் இந்தி மொழி
வடசொல் யாவும்


இவண் தமிழிற் கலப்பதுண்டோ
''பிராம்மணர் கள்உண்ணும்
இடம்'' இப் பேச்சில்

உவப்புண்டோ தமிழ்மானம்
ஒழிந்திடுதே ஐயகோ
உணர்வீர் நன்றே.

அறிவிப்புப் பலகையெல்லாம்
அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே
அன்றி, அச்சொல்

குறைவற்ற தொடராகக்
குற்றமற்ற சொல்லாக
அமையுமாயின்

மறுவற்றுத் திகழாளோ
செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள்
மகிழ்ந்திடாரோ?

குறியுற்ற மறவர்களே!
இப்பணியை முடிப்பதற்கோர்
கூட்டம் வேண்டும்.

பேச்சாலும் எழுத்தாலும்
பாட்டாலும் கூத்தாலும்
பிறர் உவக்க

ஓச்சுகவே மணிமுரசு!
வீதியெல்லாம் வரிசையுற
உலவா நிற்பீர்!

ஏச்சாலும் எதிர்ப்பாலும்
வருகின்ற இன்னலுக்குள்
இன்ப வெள்ளம்

பாய்ச்சாதோ பொதுத்தொண்டு?
பைந்தமிழ்க்குச் செயும் தொண்டு
பருக வாரீர்.

( 245 )


( 250 )

( 255 )


( 260 )


( 265 )

( 270 )


( 275 )


( 280 )

( 285 )


( 290 )


( 295 )

( 300 )