பக்கம் எண் :

14கவிமணியின் கவிதைகள்

Untitled Document
53.   பொய் களைந்திடுவோம் - மெய்மைப்
     போற்றி நின்றிடுவோம்
செய்கடனை நிதம் - உலகில்
     செய்து வாழ்ந்திடுவோம்.

13. ஞானோபதேசம்

ஞானதீபம்

54.   மனமே! நீயும் வருந்துவதேன்?
     மகிழ்ந்து தேவி திருநாமம்
தினமும் மறவா தன்போடு
     தியானஞ் செய்து வாழ்வாயே!
கனமா மணிசே கண்டியெலாம்
     கணக ணென்று முழக்காது
நினைவை ஒடுக்கி நிகழ்த்திடும் அந்
     நிஷ்டைக் கேதும் நிகருண்டோ?

55.   மண்ணினைக் கல்லதனைச் - செம்பினை
     வடிவஞ் செய்துவைத்துப்
பண்ணிடும் பூசையாலே - யாதுமோர்
     பலன்அ டைவதுண்டோ?
எண்ணிய எண்ணிலெழும் - உருவை
     இதயக் கமலத்தில்
திண்ணமாய் ஏற்றிவைத்து - நிதமும்
     செபங்கள் செய்வாயே.

வேறு

56.   பூவும் வேண்டாமே - பழமும்
     பொரியும் வேண்டாமே;
மேவும் உள்ளன்பே - தேவி
     விரும்பும் நல்லமுதாம்.

57. குருடர் கூடிநின்று - கற்பூரம்
     கொளுத்திக் காட்டுவதால்
சிறிதும் நன்மையுண்டோ? - இதனைச்
     சிந்தனை செய்வாயே.