பக்கம் எண் :

380கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1746 நின்ற துயரம் நீங்கிடவே
     நேருந் துயரம் மாறிடவே,
இன்றிக் கிண்ணம் நிறையஎனக்கு
     இனிய மதுநீ வார்த்திடம்மா!
அன்றி நாளைக் கென்பாயேல்
     அந்த ‘நாளை’ வருமுன்னம்
சென்ற கோடி ஆண்டுகளில்
     சேர்ந்தொன் றாகிப் போவேனே.
77

1747 அரிய இனிய குணமுடையர்
     அறிவும் புகழும் மிகவுடையார்
மருவும் உலகம் மதிக்கவரு
     மணியே, போல்வோர் பலநண்பர்,
பருகும் மதுவைச் சிறிதுமுனம்
     பருகிப் பருகி மெல்லஎழுந்து
ஒருவர் ஒருவர் ஒருவராய்
     உறங்க வீடு சென்றனரே.
78

1748 அங்கவ் அயனும் தங்கவொட்டான்
     அஞ்சல் வழியிங்கு அனுப்பிடுவான்;
இங்கு யமனும் இருக்கவொட்டான்
     யார்சொன் னாலும் விடமாட்டான்;
அங்கு மிங்கு மாகஅலைந்து
     அயர்ந்து வாடி அலுப்புற்றேன்;
இங்கு மங்கும் எங்குமுளோய்
     ஏழை என்னைக் காப்பாயே.
79

1749 ஒருகை அன்னம் இடமாட்டான்;
     ஊரூ ராகத் துரத்திடுவான்;
பருக நீரும் தரமாட்டான்;
     பழியில் மூழ்கச் செய்திடுவான்;
இரவும் பகலும் ஓயாமல்
     என்னை மானம் கெடுத்திடுவான்;
கருணை யில்லாக் காலனவன்
     காட்டும் கொடுமை சிறிதளவே.
80