பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு381

Untitled Document
1750 உண்ணும் உணவை அழித்திடுவான்;
     உடலை மெலியச் செய்திடுவான்;
கண்ணுக் கினிய ஆடையினைக்
     கந்த லாகக் கீறிடுவான்;
பண்ணற் கரிய மாளிகையும்
     பாழ்மண் ணாகக் கண்டிடுவான்;
எண்ணிற் காலன் கொடுமையெலாம்
     யாரே கூற வல்லவராம்?
81

1751 வாடி நித்தம் வருந்திடினும்
     வயிற்றுக் குணவு தரமாட்டாய்;
தேடி வைத்த பொருளையெலாம்
     திருடிக் கொண்டு போய்விடுவாய்;
ஆடிச் சுழலும் ராட்டினமும்
     ஆடைக் குதவு நூல்தருமே
நீடு காலச் சக்கரமே!
     நின்னால் ஏதும் பயனுண்டோ?
82

1752 ஏழை ஒன்றை எண்ணுகின்றேன்,
     ஈசன் ஒன்றை எண்ணுகின்றான்;
ஏழை எண்ணம் இந்நிலையில்
     என்றும் நிறைவு கண்டிடுமோ?
ஏழை வாழ்வை யன்றிஎதும்
     ஈசன் எண்ணான் ஆதலினால்
ஏழை எண்ணம் நிறைவேறாது
     இருத்தல் அன்றோ நலம், ஐயா!
83

1753 தேறா உலகின் மாற்றமெலாம்
     தேறும் உண்மை ஞானியர்கள்,
மாறா இன்ப துன்பத்தால்
     மயக்கம் கொள்வது என்றுமிலை;
கூறாய் இன்பம் மறைவதுபோல்
     குறைந்து மறையும் துன்பமுமே;
ஆறாப் புண்ணும் உலகில்லை;
     ஆற்ற மருந்தும் அதற்கில்லை;
84