பக்கம் எண் :

382கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1754 அன்பு செய்யின் அயலாரும்
     அண்டி நெருங்கும் உறவினராம்;
அன்பு நீங்கின் உறவினரும்
     அகன்று நிற்கும் அயலாராம்;
துன்ப நோயை நீக்கிடுமேல்
     துவ்வா விடமும் அமுதாகும்;
துன்ப நோயை ஆக்கிடுமேல்
     தூய அமுதும் விடமாமே.
85

1755 யாத சொன்னாய்? இன்னமுதம்
     ஏந்தி உண்ட கலமதனை
மோதி உடைக்கும் அறிவில்லா
     மூடன் எங்கும் உண்டுகொலோ?
ஓதற் கரிய பேரருளால்
     உவந்து கண்ட உருவமதைத்
தீதென் றெண்ணிச் சினம்பெருகிச்
     சிதைக்கத் தெய்வம் துணிந்திடுமோ?
86

1756 மறந்த துள்ளம் பிறந்ததென
     வசந்த காலம் வந்ததிதோ;
சிறந்த மலர்கள் மலர்ந்துமரம்
     தெய்வ மணமே கமழ்ந்திடுமால்;
இறந்த புல்லும் இருநிலமீது
     எழுந்து கொழுந்து விட்டிடுமால்;
துறந்த ஞானி தனிமையிடம்
     துருவிச் செல்வது ஏன்? ஐயா!
87

1757 குழியுங் குண்டும் அடர்ந்திடும்இக்
     குவல யத்தில் யான் செல்லும்
வழியும் செம்மை வழியேயாம்;
     மற்றவ் வழியை நோக்கிடும்உன்
விழியின் வளைவே வளைவெல்லாம்;
     விரைந்தவ் வளைவை நீக்கிஎனைப்
பழிவெம் பாவம் அணுகாமல்
     பாது காப்பாய் போதகனே!
88