பக்கம் எண் :

384கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1762 தண்ணார் மதியும் புரிசடையும்
     தாங்கும் தையல் பாகனென
எண்ணா தொருவன் சொன்னது கேட்டு
     எவனோ சொன்னான்; அவனைக் கேட்டு
அண்ணா சொன்னான்; அதுபோலின்று
     அடுத்த தம்பி சொல்கின்றான்;
கண்ணால் ஈசன் திருமேனி
     கண்டார் எவரும் உண்டோ? சொல்.
93

1763 நாடும் தெய்வம் இதுவென்று
     ஞாலத் தறிய முயல்கின்றார்,
தேடித் தேடிப் பார்த்ததெலாம்
     திரைமேல் வந்த திரையாகும்;
வாடி வாடி நோற்றதெலாம்
     வாணாள் வீணாள் ஆனதுவே;
பாடிப் பாடிப் பெற்றதெலாம்
     பகலிற் கனவு கண்டதுவே.
94


1764
எங்கும் மனிதர் உனைத்தேடி
     இரவும் பகலும் அலைகின்றார்;
எங்கும் உள்ளது உன்வடிவாம்;
     எனினும் குருடர் காண்பாரோ?
எங்கும் எழுவது உன்குரலாம்;
     எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் என்றும் எவ்வுயிரும்
     யாவு மான இறைவனே
95

1765 ஆல யங்கள் ஏனய்யா!
     அபிஷே கங்கள் ஏனய்யா!
கோலங் கொடிகள் ஏனய்யா!
     கொட்டு முழக்கம் ஏனய்யா!
பாலும் பழமும் வைத்துநிதம்
     பணிந்து நிற்ப தேனய்யா!
சீலம் பேணும் உள்ளத்தைத்
     தெய்வம் தேடி வாராதோ?
96