பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு431

Untitled Document
58. சூரியன் எழுந்து வந்திடானோ?
இராகம் - பௌளி     தாளம் - ஆதி

பல்லவி
1842 இருளும் நீங்கிடாதோ? - சூரியனும்
     எழுந்து வந்திடானோ?
கண்ணிகள்
ஆடு நெடுந் தேரும் - வழியில்
     அச்சு முறிந்ததுவோ?
ஏழு குதிரைகளும் - ஒன்றாய்
     இடறி வீழ்ந்தனவோ?
(இருளும்)
அரவின் வாய்ப் பட்டே - அவனும்
     அழிந்து போனானோ?
பரவையில் விழுந்து - மீளாப்
     பாதலம் சேர்ந்தனனோ?
(இருளும்)
ஏற வொட்டாதபடி - விந்தம்
     எழுந்து நின்றதுவோ?
வேறு வழியாகச் - சென்று
     மேற்கில் அடைந்தனனோ?
(இருளும்)
கோழி கூவிடாதோ? - காகமும்
     கூட்டில் மடிந்ததுவோ?
தோழி இரவிதுதான் - யுகமாய்த்
     தொடர்ந்து நீண்டிடுமோ?
(இருளும்)

வீசும் தென்றலினால் - உடலும்
     வெந்து கருகுதடி!
பூசிய சந்தனமும் - தூளாய்ப்
     பொரிந்து போகுதடி!
(இருளும்)

இன்று வருவாரோ! - அவர்தான்
     இன்னும் சில நாட்கள்
சென்று வருவாரோ? - தோழி!
     தெரிந்து சொல்லாயோடி!
(இருளும்)