“நான் மருத்துவம் படிக்கலாம் என்று பார்க்கிறேன்” என்கிறாய்.
நான் மகிழ்ச்சிக் கரையின் விளிம்பில் நின்றவாறு, “எனக்கு ஓர் ஆசை; சொல்லவா” என்கிறேன்.
“சொல்லுங்கள்” என்கிறாய்.
“ஒரு நாள்... நீ மருத்துவப் பட்டம் பெற்றுவரும் முதல்நாள்...
மடி நிறைய ரோஜா மலர்களைப் பறித்து வைத்திருக்கும் தோட்டக்காரன் மகள் போல் என் மனம் நிறைய உன் நினைவுகளைச் சேர்த்து வைத்திருக்கும் செருக்கில் மயங்கி வருகிறேன். என்னை யறியாமல் ஒரு சிரிப்பு... வெடித்த மாதுளம் பழம் போன்ற உன் கன்னத்தை வருடுவதாகவும் நீ வெட்கி ஒதுங்குவதாகவும் ஒரு நினைப்பு... இந்தப் புனித போதையில் ஆடிப் பாதையின் நடுவே வந்து விடுகிறேன்; எதிரே ஒரு தெய்வப் பெண் மனிதவாகனம் ஒன்றை அசுர வேகத்தில் ஓட்டி வருகிறாள். நான் மோதி வீழ்கிறேன்.
விழித்துப் பார்க்கும்போது மருத்துவ மனையில் இருப்பது புரிகிறது. நீ என் அருகே உலர்ந்த கண்ணீரோடு நிற்கிறாய்; ‘உங்கள் உயிரைக் குடிக்கப் பார்த்தேனே.. பாவி நான்’ என்று அழுகிறாய்.“வருந்தாதே... நீ பட்டம் பெற்றவுடன் முதன் முதலாக எனக்கு வைத்தியம் செய்ய உண்மையில் நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறேன்...”
நான் இப்படிக் கூறிக் கொண்டிருக்கும்போதே நீ குறுக்கிட்டு “நான் மருத்துவம் படிக்கப் போவதில்லை” என்கிறாய்.
நான் பதறிப்போய் “ஏன்” என்கிறேன், “எவ்வளவு அழகாகக் கதை சொல்கிறீர்கள்...” பேசாமல் உங்களிடம் இலக்கியம் படிக்கப் போகிறேன்” என்கிறாய்.
நீ சரியான குறும்புக்காரி!
66 |
|
|
|