பக்கம் எண் :

17

என்னும் தமிழ் - ஆங்கிலம் இணைந்த இருமொழித் தொகுப்பிலும் இடம்
பெற்றன.

என்   குறும்பாக்கள்   நூலுருப்   பெற   இப்போதுதான்    நேரம்
வாய்த்திருக்கிறது.

இதில்  உள்ள கவிதைகளை வாசகர்கள் ஓடுகிற ஓட்டத்தில் படித்துத்
தூக்கி எறிந்து விடாமல் கொஞ்சம் நிதானமாகப் படிக்க வேண்டும்.

சரஸ்வதி பூசைக்குப் போனால் பொரி கடலை கொடுப்பார்கள். அதில்
கடலையை விட பொரிதான்   அதிகம் இருக்கும். இருந்தாலும் பொரியை
எடுத்தெறியாமல் கடலையுடன் சேர்த்துச்  சுவைப்பதைப் போல் எல்லாக்
கவிதைகளையும் சுவைக்க வேண்டும்.

கடலைக்  கவிதைகள் சிலவற்றை அடையாளங்காட்டி அவருக்கேயுரிய
தனித்தன்மை நிறைந்த   பார்வையுடன்   ‘குக்கூ’   கவிதைகளுக்கு ஓர்
அழகிய அணிந்துரை  வழங்கியுள்ளார்   கவிக்கோ   அப்துல் ரகுமான்.
ஹைக்கூ கவிதைகளைத்   தொடங்கி   வைத்துத்  தமிழ் இளைஞர்களை
அந்தத்  திசையில்  திருப்பிவிட்ட   ரகுமான்  என் குக்கூ கவிதைகளின்
இயல்புகளையும் சீர்மைகளையும்   ஒப்பிட்டுக்   காட்டுகிறார். அத்துடன்
அண்ணாவின் தம்பியாக இருந்த நான் பொதுவுடைமைச்    சிந்தனைக்கு
ஆட்பட்டு   விட்டதாகக்     குறைப்பட்டுக்    கொண்டுள்ளார்.  இந்த
அணிந்துரையில் குழுமனப்பான்மையுடன் தான் என்னை   முற்போக்குத்
திறனாய்வாளர்கள் கொண்டாடினார்கள் என்கிறார். இதற்கு இங்கே நான்
பதில் சொல்ல விரும்பவில்லை. திறனாய்வாளர்களே பதில் சொல்லட்டும்.

‘குக்கூ’வில்  பின்பற்றப்பட்டுள்ள  இயைபுத் தொடை பல இடங்களில்
செயற்கையாகப்படுகிறது என்கிறார் கவிக்கோ. நியாயமான விமர்சனம்.