பக்கம் எண் :

18

கலை (Art)  செய்கலை (Craft) இரண்டுக்கும் இலக்கியத்தில் இடம்
உண்டு. இதில் உள்ள சில   கவிதைகள்    முதல்   வகையையும்  பல
கவிதைகள் இரண்டாம் வகையையும் சேர்ந்தவை.   இப்படித்தான்  நான்
சமாதானம் சொல்ல முடியும்.   குழந்தைகளோடு    குழந்தையாய்ச் சில
பொம்மைகளும் இருந்துவிட்டுப் போகட்டுமே !

பாலா  இத்தொகுப்புக்கு   மூன்று    மாதங்களுக்கு   முன்பே ஒரு
மதிப்புரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அவர்   சிறந்த    புதுக்கவிஞர்.    சிறந்த  சிந்தனையாளர். சிறந்த
பேராசிரியர். சிறந்த பேச்சாளர். சிறந்த திறனாய்வாளர். சிறந்த மனிதர்.

68, 69 ஆம்  ஆண்டுகளில் ஒருமுறை இராசிபுரம் போயிருந்தபோது
பாலாவைச் சந்தித்தேன். பேசிக்   கொண்டிருந்தபோதுதான் அவர் என்
உறவினர்,   என்   ஊர்க்காரர், என் மாணவர்   என்பது தெரியவந்தது.
அதற்குப்பிறகு சிவகங்கைக்கு வந்தால்   என்னைச்  சந்திக்காமல் அவர்
சென்றதில்லை.

என்னுடைய   புகழ்   வெளிச்சத்துக்கு அவர் முக்கிய ஒரு காரணம்.
ஆங்கிலக்   கவிஞர்களுக்கு நிகராகப் பெரிய வடிவத்தில் ஆங்கிலத்தில்
என் வாழ்க்கைத்  தொகுப்பேடு    ஒன்றை (Monograph)    சொந்தச்
செலவில் வெளியிட்டுள்ளார். இது   எனக்குக் கிடைத்த தனி கௌரவம்.
‘தாகூரின் கீதாஞ்சலியும் மீராவின் கனவுகளும்’ என்று ஆங்கிலத்தில் ஒரு
மாணவி   மனோன்மணீயம்  சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்
ஆராய்ச்சி   செய்யத்   தூண்டு     கோலாயிருந்திருக்கிறார்.    அந்த
ஆய்வேட்டைப்   படித்து   நான்   ஆச்சரியப்பட்டேன்.    அவ்வளவு
அருமையான ஒப்பீடு. பாலா இப்படிப்   பல்கலைக்கழக    மட்டத்திலும்
என்னை உயர்த்தி வைத்துள்ளார்.