பக்கம் எண் :

79

பாரதி, பாரதிதாசனின் பெருமை என்ன? வளரும் கவிஞர்களைத் தன்
உடன்  பிறப்புகளாக  ஏற்றுத்  தம்   இலக்கிய  வம்சம்  நிலைபெறவும்
நீடிக்கவும் செய்ததாம். பாரதியின் கவிதா மண்டலம்  தான்  பாரதிதாசன்
என்னும் மற்றொரு  மகாகவியை  வளர்த்தளித்தது. பாரதிதாசனின் குயில்
இதழே முடியரசன், வாணிதாசன்,  பொன்னடியான் போலும் பாரதிதாசன்
பரம்பரை வளர்ந்த நாற்றங்கால்.  இவை  போன்றன   தமிழ்க்  கவிதை
வரலாறு இடைவெளியற்றுத் தொடரக் காரணங்களாம்.

மீரா, கவி, அன்னம்  விடுதூது  என்றெல்லாம் இதழ்கள் நடத்தினார்.
கவிதையும்  கவிதையியலுமே  முதன்மை.  அவற்றில் அறிமுகம்  ஆகிய
புதுமுகக்    கவிஞர்கள்  ஏராளம்.  ஒரு  கவிஞரின்    முதல்  கவிதை
தொகுதியை வெளியிடுவது, விற்பது எளிதல்ல. புதுமுகம் அறிமுகப்படுத்தி
சினிமா எடுக்கும் முயற்சி அது. நட்டம் நிச்சயம். புகழ் அடுத்தே.

அகரம், அன்னத்தின்துணை அமைப்பு. இலக்கியத்தில் முதற்பூக்களை
வெளியிடுவது   அகரத்தின்  இலட்சியம்.  அதற்கென்றே   ‘நவகவிதை’
என்றொரு  வரிசைக்   கவிதை   வெளியிட்டார்.  அகரம்  வழி பலரது
கையெழுத்து   அச்செழுத்தாகித்  தமிழர்  மன  ஏட்டில்  பதிந்தது. நம்
எழுத்து அச்சாகுமா என்று உள்ளம் குமைந்து  கிடந்த   இளைஞர்களது
படைப்பை   அவர்களே  ஆச்சரியப்படும்    படியான    அச்சுக்கலை
நுட்பத்தோடு வெளியிட்டார் மீரா.

நாமறிந்த   தமிழ்   இலக்கிய வரலாற்றில்   புதிய கவிஞர்களை ஓர்
இலக்கிய வெறியோடு  அறிமுகப்படுத்தியவர் மீராவே. பெருங்கவிஞர்கள்
வளர்  கவிஞர்களுக்குச் செய்த தியாகம் சிறுபொழுது, நல்வார்த்தை, தம்
இதழில் ஓரிரு பக்கங்கள்.  ஒப்பிட்டுப்  பார்க்க  மீராவின் செயல் ; பல
நாட்கள், ஆய்வு  முன்னுரை.  பணம்  ஆயிரங்களில்.   எப்போதாவது
யாரோ ஒருவருக்கு எனில்  அதில்  விசேடமில்லை.  இலக்கிய வள்ளல்
மீரா எப்போதுமே அப்படி.