பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை101

நங்கையை என்னுளம் நாடுவ தாலும்
நுணுக்கமாய் இவளெனை நோக்குவ தாலும்
மங்கையோ? இந்த நங்கை யாரென்
றையங் கொண்டே என்னுளம்
மையல் வண்டென மயங்கு கின்றதே!

சொல்லாதே!
(சிந்து)
தென்றலின் தங்கையவள்-செந்
      தேனின் கலசமவள்!
கன்னியோ அஞ்சுகின்றாள்-கருங்
      கடலே கனைக்காதே!

குளிர்பிறை போன்றவளாம்-மலர்க்
      கொத்தினை ஒத்தவளாம்!
கிளிமகள் அஞ்சுகின்றாள்-அல்லிக்
       கேணியே பொங்காதே!

உறவில் உறங்குபவள் -நிலவே
       உன்னைக்கண் டஞ்சுகின்றாள்!
மறைவில் நடப்பவற்றை-நீ
       மாந்தர்க்குச் சொல்லாதே!

நாடகப்பத்தினி

நாடகப் பத்தினிநான்- குளிர்நதி
       நாட்டின் விலைமகள்நான்!
வாடகைச் சத்திரம்நான்-சுகம்பெற
       வந்தால் கிடைத்திடும்தேன்!