பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை11

அழகிய முகமும் அளவு கருவியே
ஆகும் என்பதை ஆராய்ந் தறிந்தே
முகந்தே அளக்கும் முகமெனும் உறுப்பை
முகமெனக் கூறினர் முன்னாள் அறிஞர்.

ஆகவே முகமெனும் அழகிய சிறுசொல்
வடமொழி யன்று! வாடாத தமிழே!
வானத்து மதியோ வட்ட வடிவம்
அந்த வட்டமோ அடிக்கடி தேயும்!

மங்கையர் முகமோ மலரைப் போன்றது;
மாம்பழப் பெண்களின் மதுச்சுவை முகமோ
தேதி யறிந்து தேய்வதோ வளர்வதோ
இல்லை என்பதை எல்லோரும் அறிவர்!

மங்கையர் முகத்தில் மணிவிழி உண்டு;
முத்துப் பற்களும் மூக்கும் நாக்கும்
பாவையர் முகத்தில் பார்க்கக் கூடும்!

வெண்ணிலா முகத்திலே விழிகள் உண்டா?
கனியிதழ் உண்டா? காதுகள் உண்டா?
இல்லவே இல்லை என்பதை அறிவோம்.

இவ்வா றிருந்தும் இன்ப நிலாவை
ஒருத்தியின் முகத்திற் கொப்பிடு வானேன்?
காரணம் உண்டு கவனம் செலுத்துக!

நீலவான் வெளியில் நீந்தும் நிலாவினில்
வட்டமும் குளர்ச்சியும் வனப்பும் இருத்தல்போல்
மதுரச் செங்கனி மங்கையர் முகத்திலும்
வட்டம் சுளியாமை வனப்பு முதலிய
தன்மைகள் ஒத்தே சரியாய் இருப்பதால்
முகத்தை வெண்ணிலா முகமெனக் கூறினர்.