பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை16

எலியோசை, இவற்றை யெல்லாம்
      யாப்புநூல் ஏற்க வில்லை,
கலையாத கடல்நீர் ஓசை
      கலிப்பாலின் ஓசை யன்றோ?

உரையிடை யிட்ட செய்யுள்
      ஓவியச் சிலம்பு தந்தோன்,
நரைதிரை வாரா முன்பே
      நாட்டிலோர் துறவி யானான்,
விரிகடல் பிறந்த போதே
      வெண்நரை பெற்றி ருந்தும்
கருநிற உடையை மாற்றிக்
       காவியேன் கட்ட வில்லை?

கிளம்பிற்று கப்பல்; வீரர்
      கிளம்பினர். அவர்க ளோடே
இளம்பெரு வழுதி சென்றான்.
      என்னானான்? உலகின் வீரம்
அளந்தவன் கடலுள் மாய்ந்தான்
      அனைவரும் வெறுங்கூ டானார்.
விளம்பரக் கடலின் கோபம்
      விட்டதோ முச்சங் கத்தை?

பொடிமணல் உலகைச் சூழ்ந்த
      போர்க்கடல், மாந்தர் தம்மை
வடிந்திடா நீரி னாலே
       வஞ்சிக்கும். அதுபோல் வண்ணக்
கொடிநமை வஞ்சிக் காது,
      கொல்லாதென் றறிந்தும், நாமோ
கொடியினை யன்றோ வஞ்சிக்
       கொடியென்று கூறு கின்றோம்!