|
முகில்
|
|
(கானல்
வரி சந்தம்)
|
கடலுடல்
தொடுபவளே! கருவொடு வருபவளே!
நெடுமலை துயில்பவளே! நிதிதரு மலைமகளே!
இடையிடை யிடியுடனே, இருள்நிற எழிலுடனே
கொடுவெயில் துயர்கெடவே குளிரொடு வந்தனையே!
குணகடல் படிந்தெழும்நீ குழல்நிறம் பெறவிலையேல்
அணிமணில் அகவிடுமோ? அதுபுது நடமிடுமோ?
மணிமலர் நகைதருமோ? மதுகரம் இசைதருமோ?
தணல்தரை குளிர்ந்திடுமோ? தமிழ்நிலம் சீர்பெறுமோ?
விரல்நிகர் அரும்பதுவே விரிந்தது நெருப்பெனவே
கருவிளை மலர்ந்ததுவே கருநிற விழியெனவே
ஒருமகள் இடையெனவே ஒருகொடி யசைந்ததுவே
உருள்நடை ரதமென உயர்மரம் பூத்ததுவே!
அழகுவில் வளைத்தனையே அதனிடங் கணையிலையே!
முழுமலை பொழிமுகிலே! முதலிதை மறந்தனையே!
தழுவிய நிலையதனால் தனியுடை நழுவியதோ?
இழிநிலை இதுவலவோ, இருள்நிற வான்முகிலே!
எழுவதுன் செயலலவோ? விழுவதுன் துளியலவோ?
பொழிவதுன் செயலலவோ? புனைவதென் தொழிலலவோ
அழகிய சுழிகுளமே! அதன்புனல் மழைவளமே!
உழவரின் அருந்தனமே! உனக்கொரு வந்தனமே! |
|
|
|