|
கார்த்திகை
தீபமெனக்
காடெலாம் பூத்திருக்கும்
பார்த்திட வேண்டுமடீ -கிளியே
பார்வை குளிருதடீ!
காடு பொருள்கொடுக்கும்
காய்கனி ஈன்றெடுக்கும்
கூடிக் களித்திடவே-கிளியே
குளிர்ந்த நிழல்கொடுக்கும்.
குரங்கு குடியிருக்கும்
கொம்பில் கனிபறிக்கும்
மரங்கள் வெயில்மறைக்கும்-கிளியே
வழியில் தடையிருக்கும்.
மாவும் பழுத்திருக்கும்
மலர்கள் விழித்திருக்கும்
பூவின் மதுசுரக்கும்-கிளியே
போவா ரடிவழுக்கும்!
பச்சை மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும்-கிளியே
நரியெலாம் ஊளையிடும்.
கல்லுரல் போன்றமுகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான்தடுக்கும்-கிளியே
வேங்கைகள் வால்நிமிர்க்கும்.
|