அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடீ-கிளியே
பூங்குயில் கூவுமடீ!
காட்டின் சிறுநெருப்பு
காந்தள் மலர்ச்சிரிப்பாம்!
நாட்டின் பெருநெருப்பு-கிளியே
நம்பிக்கை மோசமடீ!
இலைகள் உதிர்ந்தமரம்
ஏந்துங் கிளைகளெல்லாம்
வலைநிழல் போன்றிருக்கும்-கிளியே
வறுமை நிலைகுறிக்கும்.
சிங்கம் புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ-கிளியே
இயற்கை விடுதியிலே!