பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை20

தேனும் பொங்கியதே - வெயில்
தீபம் தொங்கியதே - மது
தேடி நல்லிசை
பாடி வண்டுகள்
கூடி உண்டன கொண்டன காதல்
கோடானு கோடிமுறை ஊடியே.

பூனை யின்சிறுவாய் - நகை
போலும் மெல்லரும்பாம் - மலர்
போதில் வந்ததொரு
சோதி சுந்தர
மாது கொய்தனள் செய்தனள் மாலை
மாறாத காதலிசை பாடியே.

மயில்

அகவும் மயிலே!அகவும் மயிலே!
கால மறிந்து கருமுகில் மழைதர,
இளமணல் பரவிய எழில்மிகு காடெலாம்
முல்லை அரும்புகள் மெல்ல நகைக்கச்
சிவந்த பவளம் சிதறினாற் போன்று
தம்பலப் பூச்சிகள் தரைமீது தவழ,
கைவிரல் போன்ற காந்தள் அரும்பெலாம்
நிமிர்ந்துநின் றெரியும் நெருப்பென மலர்க்
கருநிற வண்டுகள் காந்தாராம் பாடிட
ஆடிக் களிக்கும் அழகிய மயிலே!

உன்விழி நீலம்! உன்தோகை நீளம்!
உன்னுடல் மரகதம்! உச்சிக் கொண்டையோ
கண்ணைக் கவர்ந்திடுங் காயா மலர்கள்!

ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்!