பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை21

மலைக்குரல் நின்குரல்; மலையே நின்மனை;
செந்தமிழ் போன்று சிறந்த பறவைநீ!

அன்றுநீ மணிமலை அருகிலே நின்று,
மணித்தேர்அசைந்து வருமொலி கேட்டுக்
கழுத்தை உயர்த்தும் கலைமான் போன்று,
உன்றன் கழுத்தை ஓங்கி உயர்த்தியும்
அண்ணாந்த மலையை அண்ணாந்து நோக்கியும்
இட்டசிற் றடியைநீ எடுத்தெடுத் தூன்றியும்
வண்ணத் தோகையை வட்டமாய் விரித்தே
'ஓ'வெனும் எழுத்தை உண்டாக்கிக் காட்டினை;
கண்டேன்!களித்தேன்! மீண்டும் காண்கிறேன்!

நீட்டுயர் மேடையில் நாட்டிய மாடிக்
காட்டும் பறவையே ! கலைமயிலே!
தொங்கும் தோகையில் தொகைநிலை காண்கிறேன்;
வண்ணத் தோகையில் வகைநிலை காண்கிறேன்;
விரிக்கும் தோகையில் விரிநிலை காண்கிறேன்!

குறிஞ்சியே புணர்ச்சிக் குரிய திணையாம்!
காதல் புரியவோ கார்காலம் சிறந்ததாம்
என்று தமிழர் இலக்கணம் வகுத்தனர்!
வகுத்த தமிழரின் வாழ்க்கை மாறினும்
மயிலேநின் வாழ்க்கை மாறவே இல்லை!

அணிலின் சிறுவா லதுபோல் விளங்கும்
செந்தினைக் கதிரைத் தின்னும் மயிலே!
நின்பகை, கோடை நெருப்பு வெயிலே!
நீயெதிர் பார்ப்பது நீருண்ட முகிலே!

ஒரேஒரு கேள்வி உனைநான் கேட்கிறேன்,
ஆடுங் கலாபமே! அருகில்வா இதைக்கேள்:
கருவுற்ற முகிலைக் கண்டதும் நீயோ
ஆடு கின்றனை! அதுசரி, தோகையால்
ஈர முகிலினை ஏன்விசிறு கின்றனை?