பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை23

பொங்கி வழிந்திடுந்தேன் - அது
      பூக்களின் வேர்வையடி!
வெங்கனல் கோடையடி - இது
      வேனில் பருவமடி!

பொரிபொரி யாய்மலரைப் - பசும்
      புன்னை மரத்தினில் பார்,
கரிகரி யாய்நிழலை -அதன்
      காலடி சுற்றிலும்பார்;
வரிவரி யாயலையை - முழு
      வட்டக் குளத்தினில்பார்
சரிசரிஎன்பவளே - சுவை
       தரவரு வாய்மயிலே!

ஊட்டி வளர்ப்பவளே - உயிர்
       ஓவியம் போன்றவளே!
ஏட்டின் கவிதையைப்போல் - நகர்
      எங்கும் புதுமையடி!
காட்டுப் பறவையெலாம் - தமிழ்க்
       காதல் புரியுதடி!
வாட்டம் தவிர்த்திடடி - எனை
      வந்து தழுவிடடி!

குயில்

குக்கூவெனக் கூவிடும் பூங்குயிலே!
      குரலால்புகழ் தேடிடும் பூங்குயிலே!
நக்கீரனைப் பாடுக பூங்குயிலே!
      நல்லோர்பெயர் சொல்லுக பூங்குயிலே!

நிழல்தங்கிய சோலையில் கூவிடுவாய்!
      நிறமேறிய மாந்தளிர் கோதிடுவாய்!
எழில்தங்கிய தீங்கனி தின்றிடுவாய்!
       இசையால்புவி மாதரை வென்றிடுவாய்!