பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை26

மங்கல மனைகள்; ஆடல்
      வளர்கலைக் கூடம் நல்ல
சங்கநூற் புலமை மிக்கோர்
      சந்திக்கும் `வார்த்தை வீடு`;
தங்குதற் காகச் செய்த
      தனிமனை பலவற் றோடு,
பொங்குசெந் தமிழி ருந்து
      புறங்காத்த நகர மாகும்!

"துகிர்துகிர்" என்னும் ஓசை
       துகிர்விலை யோசை; பூவை
"முகர்முகர்" என்னும் ஓசை;
      மொய்த்தவர் ஓசை; "நல்ல
நகர்நகர்" என்றும், "சற்றே
       நகர்நகர்" என்றும், நீபோய்
"பகர்பகர்"என்றும், ஓசை
      பரந்தபொன் னகர மாகும்!

சீரோடு நீண்டு சென்ற
       தெருக்களில் தருக்கள்; கோவில்
தேரொடும் வசந்த வீதி;
       தென்புறம் சமணர் பள்ளி;
ஊரோடும், மழைநீ ரோடும்
       ஒற்றுமை கொண்ட பொன்னி
நீரோடு நேசங் கொண்ட
       நெய்தல்நீர் நகர மாகும்!

பிறைமுக வடிவங் காட்டும்
       பெருங்கடல் விரித்த நீரில்,
அறிமுகம் கொண்ட கப்பல்
       ஆனைபோல் அசைந்தே நின்ற