|
துறைமுக நகரம்!
உப்புச்
சுவைநீரும் பொன்னி யாறும்
மறைமுகம் ஏது மின்றி
மயங்கிய திணையூ ராகும்!
மழைகொண்ட கார்கா லத்து
மாமுகி லெனயீந் தோரும்
குழைகொண்டு, மனையில் மேய்ந்த
கோழியை விரட்டி னோரும்,
பிழைகொண்ட செயல்செய் யாத
பெரியரும், பாய்ந்த பார்வை
வழிகண்டு காதல் கொண்டு
வாழ்ந்தோரும் வாழ்ந்த மூதூர்!
செங்குத்து மலைகள் போன்று
செந்நெலைக் குவித்தும், வந்த
வங்கத்துப் பண்டம் பெற்றும்,
மணிக்கடல் முத்தை விற்றும்,
தங்கத்தை மலர்க ளாக்கித்
தக்கார்க்குப் பரிச ளித்தும்,
சங்கத்துச் செய்யுள் செய்த
சான்றோரை ஈன்ற மூதூர்!
|