|
சொல்செயும்
புலவ ரெல்லாம்
துன்பத்துள் தூங்கு கின்றார்;
நல்லவர் எல்லாம் நாட்டில்
நலிகின்றார்; ஆனால் இங்கே
அல்லவர் பெருகி வீண்வாய்
அளக்கின்றார் அதனால் தானோ
பல்லியே நின்சொல் லுக்குப்
பலனுண்டென் கின்றார் போலும்!
உனக்கொரு செய்தி சொல்வேன்;
உற்றுக்கேள்; பல்லி யேநீ
தனிக்குரல் பெற்றாய்; யானோ
தமிழ்க்குரல் பெற்றேன்; நீயோ
கனைக்கிறாய்; அதனா லன்றோ
`கனைகுரற் பல்லி` என்று
பனித்தமிழ் சக்தி முற்றப்
பாவலன் பாடி வைத்தான்,
கருங்கடல் ஓய்வே இன்றிக்
கனைத்தல்போல் கனைத்தா யேனும்,
பெருங்கடல் ஓசை கேட்டே
பெரும்புவி அச்சங் கொள்ளும்.
இருப்பினும் ஈக்கள் உன்றன்
ஈரவாய் ஓசைக் கஞ்சும்;
வரிப்புலி நீயே என்றால்,
ஈக்களே உனக்கு மான்கள்!
தலையில்நீ வந்து வீழ்ந்தால்
சண்டையாம்! தோளில் வீழ்ந்தால்
நலம்பல பெருகு மென்பர்!
நானிதை நம்பவில்லை,
|