|
இலர்பலர்
இந்த நாட்டில்
எண்ணற்றோர்! எனவே, அன்னார்
வலப்புறத் தோளில் வீழ்ந்தே
வாழச்செய் எங்கே பார்ப்போம்!
பத்தினி சொன்னால் பெய்யும்
பனிமழை என்பர்! இந்த
உத்தமி வாதம் எல்லாம்
ஊரினை ஏய்ப்ப தாகும்.
சித்திரப் பல்லி யேநீ
வடமேற்குத் திக்கை நோக்கிக்;
கத்தினால் வானம் பெய்யும்
என்பதும் கதையே என்பேன்!
வாலாட்டு கின்றாய், வேங்கை
வாலாட்டும் நாட்டில் நீயுன்
வாலாட்டக் கண்டு கோபம்
வரவில்லை எனினும் நாங்கள்
தாலாட்டும் தமிழை வீழ்த்தச்
சதிசெய்யும் பகைவர் கூட்டம்
வாலாட்டத் தொடங்கு மாயின்
வாலறு பட்டே தீரும்!
பாலிலே குளித்திட் டாளாம்
பனிமங்கை கிளியோ பாத்ரா!
காலையில் எழுந்தே காக்கை
கட்டாயம் குளிக்கும்; ஈந்தின்
ஓலைப்போல் நீண்ட நீயோ
ஒருநாளும் குளிப்ப தில்லை!
தோலுடல் வியர்த்தா லன்றோ
தூயநீ ராடு வாய்நீ?
|