|
3.
வரலாற்று வாயில்
|
|
தரை மீன்
|
புதியபுனல் பொங்கிவரக்
கண்டு, மாந்தர்
பூரிக்க கோவேந்தன் கரிகாற் சோழன்
நதிநிதியை வரவேற்று, வெள்ளந் துள்ள
நடந்துவரும் காவிரிக்கு விழாக் கொண்டாட
மதிமதுரப் புலவரெல்லாம் புகழ்ந்து பாட
வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி,
எதுகைவரல் போலடுத்து வந்தாள்; அத்தி
என்பானோ, மோனையைப்போல் முன்னே வந்தான்.
"பாடுதுறை அறிந்தவளே! காப்பி யத்தின்
பலதுறையும் அறிந்தவளே! அனிச்சப் பூவே!
ஊடுவது காமத்திற் கின்பம் என்னும்
உறவுதுறை, இரவுதுறை அறிந்த மாதே!
ஆடுதுறை அதுதானோ?" என்று கேட்டான்,
ஆணிப் பொன் மேனிமங்கை 'ஆம்ஆம்' என்றாள்
கூடுதுறை அறிந்தவனும் கோதை மாதும்
குளிர்ந்தகழார்த் துறைநோக்கி நடக்கலானார்.
'வானோடு விளையாடும் நிலவே! நீரில்
வளர்கின்ற தாமரையே! கோவை நூலின் நானூறு துறைகளைநீ அறிந்தி ருந்தும்
நதித்துறையைக் காட்டுகின்றாய்; வெள்ளிப்
புள்ளி
மானோடு பார்வைப்போர் புரியும் பெண்ணே!
மறந்தனையோ கட்டில்துறை காட்ட' என்றான்.
தேனோடு வாய்திறந்த புதுப்பூப் போன்றாள்,
"செங்கதிரோ வானத்தை மறக்கும்?" என்றாள். |
|
|
|