பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை33

கண்ணாலே கதைசொல்லும் மாதே!` என்றான்.
       கட்டழகிமொட்டுமொட்டாய்ச் சிரித்தாள்; `யாவும்
பெண்ணாலே ஆகு`மென்றான். அதனைக் கேட்டுப்
      பிழிந்ததொரு புடவையெனக் குனிந்து கொண்டாள்.

பெரியபுகழ் பெற்றவனை மணந்த மங்கை,
      பின்புறத்தில் 'தொங்குகின்ற மேகம்' என்னும்
கரியகுழல் தனைக்கரத்தால் பிழிந்து கொண்டே
       கரையேறித் தேர்நின்ற இடத்தில் நின்றாள்.
தரைதடவிக் கரைதடவும் பொன்னி யாற்றில்
       தமிழ்வேந்தன் நுரைதடவி நீந்தும் வேளை,
அரியரியாய் வரிவரியாய் வடிவங் காட்டும்
      அலைகளினால் ஆட்டணத்தி இழுக்கப் பட்டான்.

பந்தெனவே காரிவிரியில் மிதந்தான்; நீரில்
       பாராங்கல் போலமிழ்ந்தான்; சேனை யானைத்
தந்தமென மேல்நோக்கி எழுந்தான்; அத்தி
       தத்தளித்தான் தமிழரசி தரைமீ னானாள்.
கொந்தளித்த வெள்ளத்தில் மறைந்து போன
      கோமானை, விழிவிளக்கால் தேட லானாள்;
செந்தணலில் தளிரானாள்; தீயில் வெந்த
       சிறுகயிறு போலானாள்; ஓட லானாள்.

ஓடிக்கொண் டேயிருந்த நதியை நோக்கி
      ஓடிக்கொண் டேயிருந்தாள், வாடிக் கொண்டே!
வாடிக்கொண் டேயிருந்தாள்,சூறைக் காற்றின்
       வசப்பட்ட கப்பலைப்போல் ஆடிக் கொண்டே!
ஆடிக்கொண் டேயிருந்தாள் அழகி,
      ஆற்றின் அடிநீரில் மறைந்தவனைத் தேடிக் கொண்டே!
தேடிக்கொண் டேயிருந்தாள் ஆதி மந்தி
       சிந்தாத கண்ணீரைச் சிந்திக் கொண்டே!