|
கிடுகிடுக்க
வைத்தவனே! பிறர்போல் நின்னைக்
கேட்பதற்கு வரவில்லை; கொடுக்க வந்தேன்.
மருந்தாலே நோய்தீரும்; வானம் சிந்தும்
மழையாழே வறண்டவயல் ஏக்கம் தீரும்;
விருந்தாலே பசிதீரும்; ஆனால், காதல்
வெப்பத்தில் கொப்பளிக்கும் நோயோ, எந்த
மருந்தாலும் தீர்வதில்லை; காதல் நோயை
மந்திரங்கள் தீர்ப்பதில்லை; மங்கை தீர்ப்பாள்,
அரசாங்கம் நடத்திவரும் இருங்கோ வேளே,
அறிந்தும்நீ இளமையைவீண் ஆக்கல் நன்றோ?
புத்தகங்கள், முத்தமிடும் மனைவி, சொற்கள்
புரியாத மழலைமொழி பேசும் மக்கள்,
இத்திரைமீ தினிலொவ்வோர் மனித னுக்கும்
இருப்பதுவே சிறப்பாகும்; இருக்கு மாயின்,
புத்தகத்தால் பேரறிவும் குழந்தைப் பேச்சால்
பூரிப்பும் மனைவியினால் சுகமும் சேரும்;
எத்தனைப்பேர் இருந்தென்ன? மனைவி இல்லான்
இல்வாழ்க்கை கரும்புக்கு வெறும்பூ அன்றோ?
பொங்குகின்ற புகழ்வேண்டி உயிர்வேண் டாது
போராடும் வீரரொடு களத்தில் நின்று
செங்குருதிப் போர்புரிந்து வாகை சூடிச்
சிரித்தவனே! இணைமோணை போன்றிருக்கும்
மங்கையரை யான்தரநீ ஏற்றுக் கொள்க.
வரலாற்றில் வளர்பவனே! இல்ல றத்தைத்
தங்குதடை இல்லாது நடத்திச் செல்க!
தமிழ்மொழிபோல் நீடுழி வாழ்க என்றான்.
|