பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை38

ஆரமுதம் போற்சிறந்தோன் அறிவில் மூத்தோன்
      ஆய்ந்தாய்ந்து சீர்தூக்கி முடிவு காணும்
காரணமே ஆயென்னும் பெயரைத் தாங்கக்
      காரணமாம்! இன்னுங்கேள் விறலிப் பெண்ணே!

சீர்கொண்டு தளைகண்டு செறித்த சந்தச்
       சிறப்பமைந்த அடிகளிட்டுத் தொடையைத் தூக்கிப்
பேர்கொண்ட புதுப்பாடல் பாடவல்ல
      பெரும்புலவர் வறுமைக்கு மருந்து போன்றோன்.
கார்நின்று மிகப்பெரிய பஞ்சம் வந்த
      காலத்தும், தருங்கையைத் தளர்த்தி டாது,
நேர்நின்று தாயைப்போல் கருணை காட்டும்
      நீர்நாடன்! நிதிபதியாய் விளங்கும் வள்ளல்!

கன்னலென இனிப்பவளே! சங்க நூலின்
       கற்கனைபோற் சிறந்தவளே! அந்த மன்னன்
தென்பொதிகை மலைச்சாரல் மன்னன்; போரில்
       செயங்கண்டு பயன்கொண்ட சேனை மன்னன்,
அன்புடைய மனைவிக்கே ஆசை மன்னன்;
       அம்மன்னன் நமக்கெல்லாம் மீசை மன்னன்;
பொன்னைநிகர் புலவரெல்லாம் போற்றும் மன்னன்;
      புகழ்புரிந்தே வாழ்நாளை வளர்க்கும் மன்னன்.

மலைதடவும் தோளுடையோன்; கார்கா லத்து
       மழைதடவும் கரமுடையோன்; ஓய்வே யின்றிக்
கொலைதடவும் வாளேந்தி எதிர்த்த `கொங்கர்`
       கூட்டத்தை வீழ்த்திடவே, சிறந்த கூர்வேல்
இலைதடவி, மீசையைமே லேற்றிப் பார்வை
       இரண்டினையும் தனிக்கனலாய் மாற்றி, மாற்றார்
தலைதடவி மிதிக்கின்ற யானை ஏறித்
      தாராடப் போராடி வெற்றி பெற்றோன்.