|
விதவிதமாய்ச்
சந்தநய நட்புண் டாக்கி
வியப்புமிகு உவமைகளால் புதுமை தேக்கிப்
பதமுடைய பாவினமாம் விருத்த மாக்கிப்
பதின்மூன்றி லம்பகமாய் வகுத்துத் தூக்கி,
இதயமதை இறைவன்பால்பதிய வைத்தோன்
இன்பச்சிந் தாமணிநூல் இயற்ற லானான்.
நரிவிருத்தம் பாடியவன்; முற்றக் கற்ற
நற்கவிஞன்; தக்கதி்ருத் தக்க தேவன்
வரிவிருத்தக் காப்பியத்தைத் தமிழ்ச்சங் கத்தில்
வைத்திட்டான், தைத்திங்கள் தொடங்கும்நாளில்!
ஒருதிருத்தங் காணுதற்கும் வழியே இல்லா
உயர்நூலை, மன்றத்தார் மெச்ச லானார்.
தரைதிருத்தி நாடாண்ட பாண்டி வேந்தன்,
சாகாத நூல்தந்த கவியை நோக்கி...
'கலைதேர்ந்த விலைமாதர் தொடுதோள் போன்று
கற்பார்க்கெல் லாம்மிக்க எளிதாய், அந்த
விலைமாதர் உள்ளம்போல், திட்ப நுட்ப
விளக்கமெலாம் அறிதற்கே அரிதாய்,
நல்ல நிலைமாதர் கற்பெனவே சிறந்த தோர்நூல்
நீதந்தாய்; சுவைசிந்தா மணியைத் தந்தாய்;
தலை, கால் கை, இவற்றையெல்லாம் காத்தோர் செத்தார்
தமிழ்காத்தோர் வரலாற்றில் செத்த தில்லை!
வேற்றமையை வினைச்சொற்கள் ஏற்ப தில்லை.
வெறும்பாட்டைத் தமிழ்சங்கம் சேர்ப்ப தில்லை.
மாற்றறியாச் செம்பொன்போற் சிறந்த சிந்தா
மணி, தமிழுக் கணி`; என்றான் விரிந்த வைகை
ஆற்றருகே தமிழவையில் வீற்றி ருந்தோர்
அனைவருமே அவன்பேச்சை ஆமோ தித்தார்.
|