பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை43

நாற்றிசையும் புகழ்பொங்க வாழ்ந்த வேந்தன்,
      நல்லகுறுந் தொகைப்புலவர் தம்மை நோக்கி...

`அப்பத்தைச் சுடும்போது பொத்தல் வந்தே
      அதன்நடுவில் தானாக அமைதல் போலே,
ஒப்பற்ற காவியத்தில் எங்கி ருந்தோ
       ஓடிவந்து கருத்துக்கள் குதிப்ப தில்லை.
ஒப்பிட்டுச் சொல்லுதற்குத் திறமை வேண்டும்.
       உழைத்தார்க்கே அத்திறமை வந்து வாய்க்கும்;
உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற
       உவமையில்லாப் பாடலுக்கும் பெருமை யில்லை!`

`திருத்தாமல், திருந்தாமல் மாற்ற மில்லை
      திருத்துங்கள், தீட்டுங்கள்; புரியாப் பாடல்
செரிக்காத சோறாகும்; மனித னுக்கே
       தேவையற்ற சாதிமதம் போன்ற தாகும்,
உருப்போடும் பண்டிதரால் மறும லர்ச்சி
       ஒருநாளும் உண்டாகப் போவ தில்லை.
கருத்தூன்றி ஆராய்ந்து முயற்சி செய்து
       கலைத்தொண்டில் தோற்றாலும் பெருமை யுண்டு!

கத்துகடல் நீராலும் கயவ ராலும்
      கனலாலும் கண்கலந்த தூக்கத் தாலும்
எத்தனையோ நூற்களைநாம் இழந்து விட்டோம்!
      இல்லையெனில் ஒருநூலா இரண்டு நூலா,
பத்திரண்டா யிரங்கோடி நூற்க ளன்றோ
       பைந்தமிழர் கைவசத்தில் இருந்தி ருக்கும்;
வித்திடுவீர்!? என்றுரைத்தான், புலவ ரெல்லாம்
       விழித்தெழுந்தே செழித்ததமிழ் வளர்க்க லானார்!