|
மாடென்றால்
செல்வம், கண்ணே!
வருந்தாதே!" என்றான்; பார்வைப்
பாடத்தின் தலைவி நெஞ்சம்
பாரியின் சுனையா யிற்றே!
"நிறைந்தநாள் நிலவே! கேளாய்;
நின்னங்கம் கட்டித் தங்கம்
குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே! நெருங்கி நீண்டு
நிறைந்தரும் நினது கூந்தல்
நெடுந்தொகைச் செல்வம் அன்றோ?
சிறந்தசெம் பொன்னே ! சந்தச்
செந்தமிழ்ப் பண்ணே!" என்றான்.
"மா" வென்றான்; மையல் தையல்,
"மாவென்றால், பெருமை" என்றாள்,
"மாவென்றான்; செங்கை மங்கை
"மாவென்றால் கருமை" என்றாள்.
"மாவென்றான்; "குதிரை, வண்டு,
மாமரம்" என்றாள், "நீ தே
மா" வென்றான்; "நான்மான்" என்றாள்.
"மானுக்கேன் ஆடை?" என்றான்.
"அடிப்படை மானங் காக்க
உடுத்துகின் றோமே யன்றி,
உடையொடு பெண்ணோ, ஆணோ,
உலகினிற் பிறப்ப தில்லை!
இடையிலேற் பட்ட தேயிவ்
வழக்கமென் றெடுத்துக் காட்ட,
இடையினில் ஆடை கட்டிக்
கொண்டுளேன்" என்றாள் கோதை!
|