| மாடத்தை
விட்டு, வேங்கை
வீரனும் வீணை மாதும்
கூடத்தை அடைந்தார்; ஆங்கே
குலவினார் நிலவில்! "எங்கோ
ஓடிப்போய் விட்ட தேயென்
ஒளியிதழ் வண்ணம்" என்றாள்;
"தேடிப்பார் விழியில்" என்றான்.
சிவந்தவள் சிரிக்க லானாள்.
"ஆராத இயற்கை என்னும்
அவாநமக் கில்லை என்றால்,
வேரொடுங் காத லேது"
வினாவிடை விளக்க மேது?
தேரோடும் பூம்பு காரின்
செல்வமே! தேனே! மானே!
நீரோடும் பொன்னி யாறே!
நீயின்றேல் எனக்கே தின்பம்?"
"பலர்புகழ் மதியே நின்னைப்
பார்க்கநிம் மதியே ! நெய்தல்
நிலம்வளர் கடலே ! மின்னும்
நின்விழி கடலே! முன்னோர்
வலஞ்சுழித் தெழுதி வைத்த
வளர்தமிழ் எழுத்தே!" என்றான்.
சிலந்திநூல் இடையாள் கன்னம்
சிவந்தது, நாணத் தாலே!
|