|
சித்தூர்ச்
சாம்பல்
|
"இந்தியரே!
எச்சரிக்கை; இதனைக் கேளீர்!
இரண்டாவ தலக்சாண்டார் நான்தான். உங்கள்
தந்திரமோ மந்திரமோ தவமோ என்னைத்
தடுப்பதற்கு முடியாது. பிறந்த நாட்டில்
பந்தடித்தேன்; பாய்ந்தடித்தேன் பலரை! வாழைப்
பழம்போன்று வடநாட்டை விழுங்கு தற்கு
வந்திருக்கும் எனைநீங்கள் எதிர்ப்பீ ராயின்,
மறுநாளின் உதயத்தைக் காண மாட்டீர்!"
பலாக்காட்டில், நிழல்தனிலே குட்டி யோடு
படுத்துறங்கும் வரிவேங்கைப் புலியின் வாலை,
மிலாறென்று தவறாக எண்ணிக் கொண்டு
மிதிக்காதீர்! குதிக்காதீர்! குதித்தால்
கொல்வேன்.
சலாலுத்தீன் கில்ஜியென்பான் முதலில் வந்து
சந்தித்தான்; சாதித்தான்; அதற்குப் பின்னர்
அலாவுதீன் வந்துள்ளேன்!? என்றே நாட்டில்
அனைவரையும் அதட்டியவன் அல்லா வுத்தீன்.
அல்லாவு தீன்தீய தீயைப் போன்றோன்.
அன்னவனோ மலந்தேடும் ஈயைப் போன்றோன்.
பொல்லாதோன்; கல்லாதோன்; பொய்மை பேசிப்
பொழுதினையே சுருக்கிவந்த புல்லன், தச்சன்
கொல்வானே நீள்மரத்தை! அதுபோல், கத்திக்
கொலைசெய்தோன்; அக்கொடியோன் ஆண்ட நாளில்
எல்லோரும் அல்லலுற்றார்; சிரச்சே தத்தின்
எண்ணிக்கை ஏறியதாம் வயது போல!
வேல்மீதும் வாள்மீதும் போரின் மீதும்
வீரரெல்லாம் அன்றாடம் ஆசை வைப்பர்.
|
|
|
|