|
மண்மேடும்
பொன்மேடாய் மாறும்; வான
மழைத்துளியும் வலம்புரிமுத் தாக மாறும்!
நிழலழகே நெஞ்சத்தை மயக்கு மாயின்
நேரழகு வாட்டாமல் விடுமோ என்னை!
மழையழகுக் கூந்தலில்மென் மலர்கள் சூட்டி
மடிநடுவில் உடைபோன்று படிந்து, மூங்கிற்
கழியழகுத் தோள்தொட்டுத் தழுவி, இன்பக்
கடலாடும் நாளெந்நாள்? என்றே எண்ணி
விழிகளினால் அவளழகைக் கௌவிக் கொண்டு
வெறியோடு விடைபெற்றான் புடவைப் பித்தன்!
வடிவழகன் பீமன்சிங் அலாவு தீனை
வழியனுப்பி வைப்பதற்கு வந்த போது
கொடியவனோ அன்னவனைச் சிறையில் வைத்தான்.
குலக்கொடியோ, மன்னவனை மறுநாள் அந்தி
முடிவதற்குள் தந்திரமாய் மீட்டு வந்தாள்,
முன்கோபம் பின்கோபம் இரண்டும் பொங்க
நெடுங்குரலோன் அலாவுத்தீன் சித்தூர் நோக்கி,
நிலம்நெளியப் பெரும்படையை நடத்திச் சென்றான்.
ஆரணங்கை அடைவதற்கு மீண்டும் யுத்தம்!
ஆயுதங்கள் தருஞ்சத்தம்; கத்தி முத்தம்!
வீரரெல்லாம் தாய்நாட்டுக் காகச் செத்தார்;
வேல்வேந்தன் தன்மனைவிக் காகச் செத்தான்!
பாரதப்பெண் பத்மினியோ, கற்பைக் காக்கப்
பழுத்தபலாச் சுளைத்தீயில் பாய்ந்து செத்தாள்!
சீரமைந்த மாணிக்க மகுட மங்கை,
செத்தற்குச் செத்திட்டார் சித்தூர் பெண்கள்!
|