பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை52

தென்னகத்தில் பேரறிவு மிகுந்தி ருக்கும்;
      தேன்சுவைநின் புதுப்பேச்சில் மிகுந்தி ருக்கும்!

"நிதங்குளிரும் நிலாமுகம் அல்லிப் பூவை
       நினைவூட்டும் வாயிதழும் மெல்ல மெல்ல
ஒதுங்குபதங் கொண்டகொடி யிடையும்; பார்வை
      உணர்ச்சிகளும் ஒய்யார நடையும் காலின்
சதங்கைதரும் சங்கீதச் சுவையும் தேமாந்
       தளிர்நிறமும் தமிழமுதப் பேச்சும் பூச்சும்.
மதங்களையே நம்பாத என்றன் நெஞ்சை
       மயக்குதடி! நச்சினவர்க் கினிய மாதே!"

"முத்திநெறி யிறியாதார் மூர்க்கர் என்றால்,
       முத்தநெறி அறியாதார் வீண ரன்றோ"
கத்திநெறி வீரரிடம் போய்ச்சே ரட்டும்;
       காதல்நெறி நம்நெஞ்சில் உறவா டட்டும்!
பத்திநெறி தலைநரைத்த பின்னர் வந்து
       பதியட்டும் இதயத்தில்! மெத்தை ஏறும்
வித்தையெலாங் கற்றவளே! திருவா னைக்கா
       வில்விளங்கும் திருவில்லே! தஞ்சை நெல்லே!"

"பூவெல்லாம் பொன்னேநின் உடலின் மீது
       பூத்திருக்க, நீயவற்றைப் பார்த்தி ருந்தும்
காலெல்லாம் சென்றுசென்று, நின்று நின்று
       கால்நோவப் பூப்பறித்துச் சூடும் பெண்ணே!
நாவில்நீ! நெஞ்சில்நீ! அஞ்ச னாட்சி
       நல்லதமிழ்ப்பாடல்நீ அன்றோ?" என்றான்,
ஓவம்மாள் ஈன்றமகள் சிரிப்பை ஈன்றாள்,
       உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!