|
பால்தீர்ந்த
முலைசுவைத்தும் பசிதீ ராத
பாலகனோ தன்தாயின் முகத்தை நோக்க;
நூல்நூத னம்போலே இளைத்த மங்கை
நூறுமுறை என்முகத்தை நோக்கி நிற்க;
கால்நோக ஓடிவந்தேன், குமண மன்னா;
கண்ணீரை உம்மிடத்தில் காட்ட வந்தேன்.
"பலசுளைகள் நிறைந்திருக்கும் காரணத்தால்
பலாப்பழத்தைப் பலவென்றார், அதுபோல்
மங்கை
பலபுதல்வர் தமையீன்றாள் என்ப தாலே,
பலாமனைவி என்மனைவி! மூத்துப் பூத்த
தலையுடையார் எம்தந்தை; அங்க மெங்கும்
தசைவற்றி நரம்பெழுந்த தாயே என்தாய்.
இலர்பலராய் இருக்கின்றோம்; கண்ணீர் ஒன்றே
எங்கட்குக் காவேரி!" என்றான் சாத்தன்.
"நெட்டைமரக் கூட்டஞ்சேர் காட்ட கத்தே
நின்றிருந்த தமிழ்க்குமணன்அவனை நோக்கி,
எட்டடுக்கு மாளிகையும் நகரும் நாடும்
என்வசத்தில் இருக்கையில்நீ வந்தி ருந்தால்,
ஒட்டகத்தின் காலடியை ஒத்த முத்தும்
ஒளிசிறந்த செம்பொன்னும் தந்தி ருப்பேன்;
திட்டமெல்லாம், நிலநடுக்கத் தாலே சாய்ந்த
தேராகி யிருக்கையில்யான் என்ன செய்வேன்!"
"நன்மைநிலை அனைத்தையுமே இழந்தோன் என்னை
நாடிவந்த நற்கவியே ! நீயும் நானும்
முன்பனியும் பின்பணியும் ஆனோம்; ஈர
முகில்மறைத்த நிலவானோம்; கவிக்கோ மானே!
என்னிடம்நீ ஏதேனும் பெறலாம் என்றே
இன்றன்றோ வந்துள்ளாய் என்செய் வேன்யான்!
|