|
ஒன்றுரைப்பேன்
அவ்வாறே செய்க" என்றான்;
ஓங்குபுகழ் பாவேந்தன் "உரைப்பீர்" என்றான்.
"விலைமிகுந்த முடிசூடி மகிழ்ச்சி யோடு
வீற்றிருக்கும் என்தம்பி யிடத்தில் என்றன்
தலையதனைத் தந்திட்டால் கோடி செம்பொன்
தந்திடுவான்; தரித்திரமும் தரித்தி ராது!
நிலையுயர, நீயுயர, நினது நாட்கள்
நீடிக்க, நெடுந்தமிழ்க்குத் தொண்டு செய்யத்
தலையதனைத் தருவதற்குச் சம்ம தித்தேன்;
தமிழுணர்ச்சிப் பாவலனே, கொய்க" என்றான்.
"மதிமிகுந்தோர் தமைமதிக்கும் மன்னா! நின்னை
வரிவேங்கை கொல்லவரின், உடனே என்றன்
சதைகொடுத்துச் சாவேனே யன்றி யும்மைச்
சத்தியமாய்ச் சாகவிடேன், கோட்டைச் செந்நெல்
விதைகிடைத்தால் காப்பாற்ற வேண்டு மன்றி
வேகவைத்தால் விளைவேது? என்றன் கண்ணீர்
நதிநிறுத்த நினைக்கின்றீர்; உமது மூச்சை
நான்நிறுத்திப் போவதற்கோ இங்கு வந்தேன்."
"கண்ணமைந்த முரசொலியார் காதங் கேட்கும்;
கருமுகிலின் ஓசைபல காதங் கேட்கும்;
மண்ணமைந்த மத்தளத்தில் இருகை வைத்து
மத்துமென்தென் றேவோசை எழுப்பு வோரும்;
பண்ணமைந்த யாழெடுத்து மீட்டு வோரும்,
பாவலரும் நினைத்துப்புகழ்ந்து பேசும் ஓசை
விண்ணமைந்த வையமெல்லாம் விரைந்து கேட்கும்!
வேந்தேயான் வருகின்றனே" என்றான் சென்றான்.
(மூலம்: புறநானூறு 164.)
|