பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை60

கண்பாவை இழந்த கள்வன்
      காய்ச்சீரால் நடந்து சென்ற
வெண்பாவை பூர்த்தி செய்து
       வெற்றியைத் தேடித் தந்தான்;
பெண்பாவை விளக்கைத் தூண்டப்
       பிடிப்பட்டான் பாட்டுப் பித்தன்!

சாயலைக் காட்டும் காம
       சமுத்திரப் பரத்தை, ஆங்கோர்
ஆயிரம் கேள்வி கேட்டாள்;
       அதற்கவன் விடைகள் தந்தான்.
"தாயினும் சிறந்த தான
       தமிழ்கற்றும், சிலையில் லாத
கோயில்போல் ஆனேன்" என்று
       கூறினான்; இரக்கங் கொண்டாள்!

"நிதியில்லை; எனக்கோர் காணி
       நிலமில்லை; வீடு வாசல்
எதுவும்நான் பெற்றே னில்லை
       என்பது வறுமை அன்று!
மதிநுட்பம் இலாமை ஒன்றே
       மாந்தர்க்கு வறுமை யாகும்;
இதைநன்கு புரிந்து கொண்டால்
       இல்லையென் றேங்க மாட்டார்;"

"இருப்பினும், `பொருளும் பொன்னும்
       இல்லாரைப் பார்த்துப் பார்த்துச்
சிரித்திடும் உலகம்` என்னும்
       செய்தியும் அறிவேன்" என்றாள்."
நெருக்கடி தீர்த்துவைத்தால்
       நிச்சயம் வாழ்வேன்" என்றான்;