|
சந்திரனை
அண்ணாந்து பார்த்தான் செவ்வேள்;
தமிழ்நிலவில் தன்மனைவி முகத்தைக் கண்டான்!
உந்தியெழும் உணர்ச்சியால் கொந்த ளித்தான்;
உள்ளத்தால் இல்லத்து மாதைத்தொட்டான்.
அசைந்தாடும் பூங்கொடியைச் செவ்வேள் கண்டான்;
அக்கொடியில் எழில்நங்கை இடையைக் கண்டான்;
பசியோடு வந்தார்க்கு வெண்சோ றிட்ட
பாவையவள் புன்னகையை பூவிற் கண்டான்;
திசைதோறும் இல்லிறைவி வடிவங் கண்டான்;
செவ்வல்லி மலரில்வாய் மலரைக் கண்டான்;
இசைபாடுங் கருங்குயிலின் குரலின் பத்தில்
ஏந்திழையின் தீந்தமிழ்த்தேன் குரலைக் கேட்டான்!
போர்வீரன் ஊர்திரும்பி வருதல்போலும்,
புதுவெள்ளம் புரண்டெழுந்து வருதல் போலும்,
ஊர்நோக்கி விரைந்தோடி இல்லம் வந்தான்;
ஓவியத்தைப் போன்றவளோ அவனை நோக்கி,
"நீர்வேண்டு மா?" என்று கேட்க, "கண்ணே!
நீரெதற்கு? நீயன்றோ வேண்டும்! உன்னைப்
பார்பார்பார் என்விழியில்!" என்று கூறிப்
பழத்தோடு பழஞ்சேர்த்துச் செந்தேன் சாய்த்தான்.
சுட்டாகி, வினாவாகி, எச்ச மாகித்
தொகையாகித் தொடராகி, ஆங்கே நின்ற
கட்டாணி முத்தழகி அவனை நோக்கிக்
"காதலரே! யானுங்கள் கைக ளுக்கே
எட்டாத கனியாக இருந்தி ருந்தால்,
இப்படியா என்கன்னம் சிவக்கும்?" என்றாள்;
பட்டாளப் பயிற்சிபெற்ற செவ்வேள், வாழைப்
பழத்தோட்டம் போன்றவளைக் கூர்ந்து நோக்கி...
|